‘தமிழ் ஆர்வலர்’ நரேந்திர மோதி- தமிழகத்தின் ஆர்வலர் ஆவது என்று? பா. கிருஷ்ணன்
முன்பு இருந்த பிரதமர்களிடம் பார்க்க முடியாத ஒன்றை தற்போதைய தலைமையமைச்சர் நரேந்திர மோதியிடம் காண முடியும்.
செய்தியாளராக இருந்தபோது, சில தலைவர்களின் கூட்டங்களில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, இந்தத் தலைவர் இப்படித்தான் பேசுவார் என்று முன்கூட்டியே தீர்மானிப்பது உண்டு. பெரும்பாலும் அப்படியே நடக்கும். திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய நிகழ்வை ஒட்டி ஏதாவது ஓர் அறிவிப்பு வரும் என்றும் ஆட்சியில் இல்லாத போது, நிச்சயம் ஓர் அரசியல் வெடியைக் கொளுத்திப் போடுவார் என்றும் எதிர்பார்ப்பதுண்டு.

தற்போது இந்தியத் தலைமையமைச்சர் மோதி தமிழகத்தில் கலந்துகொள்ளும் கூட்டங்களில் நிச்சயம் புறநானூறு, பாரதியார் பாடல், திருக்குறள் என்று இடம்பெறும். அதிலும் திருக்குறளை அவர் மேற்கோள் காட்டுவார் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) மன் கீ பாத் (மனத்தோடு பேசலாம்) வானொலி உரை மாத நிகழ்ச்சியில், "தமிழில் ஏராளமான இலக்கிய வளங்கள் உள்ளன. தமிழைக் கற்றுக் கொள்ளாததற்காக வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தேர்தல் காலத்து உரையாக எண்ணி ஒதுக்கிவிட முடியாது. ஏற்கெனவே, மன் கீ பாத் நிகழ்ச்சியில் கோவையில் ஒருவருடன் உரையாடும்போது, தமிழிலேயே பேசியிருக்கிறார். அவரிடம் "உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது" என்று கேட்டு, திருக்குறள் என்று பதில் கூறியதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒரு மாணவியுடன் தமிழில் சில வரிகள் உரையாற்றியுள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்ற ஆசிரியை பொது முடக்க காலத்தில் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடங்களை அசைபடங்களாக (அனிமேஷன்) வடிவில் தயாரித்து பென் டிரைவில் போட்டு அனுப்பியுள்ளதை விவரித்துப் பாராட்டியுள்ளார்.
ஐ.நா. சபையில் 2019ம் ஆண்டு செப்டம்பரில் கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார்.
எல்லையில் போர் வீரர்களிடம் பேசியபோது, திருக்குறளின் படைமாட்சி அதிகாரக் குறளையும் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.
எல்லாவற்றையும் விட பல ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடைபெற்ற மாணவர்களிடம் பேசிய நிகழ்ச்சியில் பேசிய மோதி, "தமிழ் மொழி வடமொழியை விட மூத்தது" என்று குறிப்பிட்டது கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோரை பெரிதும் பாராட்டினார்.
பாரதி பாடல்களையும் அவ்வையார் பாடல் வரிகளையும் அவர் மேற்கோள் காட்டி வருகிறார். இதில் வியப்பும் பாராட்டுக்கும் உரியது, தமிழ் வரிகளை மனனம் செய்து பேசுவதுதான். துண்டுச் சீட்டு கூட இல்லாமல் ஓரளவுத் தமிழைச் சிதைக்காமல் பேசுவது வரவேற்கத் தக்கதுதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அரசு விழாலில் கூட "மகாகவி பாரதியின் பிறந்த மண்ணிலே நிற்பதற்குப் பெருமைப் படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மீதும், தமிழ்ப் பாரம்பரியம் மீதும் அவருக்கு அளப்பரிய மரியாதை இருப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. காரணம் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவருக்குப் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர்கள் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள். அவற்றை அவர் செயல்படுத்தியதால், அங்கே நல்ல பெயரை அவர் பெற்றார். இதை மாற்றுக் கட்சியினரும் பதிவிட்டுள்ளனர்.
தமிழன் என்ற முறையில் இதற்கெல்லாம் அவரிடம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தமிழ் ஆர்வலராக அவர் இருக்கிறார் என்பதை நிராகரிக்க முடியாது.
இதற்கு முன்னோடியாக இருந்தவர் என்றால், மோதி பிறந்த அதே குஜராத்தில் அவதரித்த மகாத்மா காந்தியைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், அவர்தான் "அடுத்த பிறவி இருந்தால், நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்" மனப்பூர்வமாக கூறினார். மதுரை பயணம்தான் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தில்லையாடி வள்ளியம்மையை அவர் பெரிதும் போற்றியுள்ளார். திருக்குறளை அவர் நேசித்திருக்கிறார்.
ஏன், மோ.க. காந்தி என்று தமிழ் எழுத்துகளிலேயே எழுதியுள்ளார்.
மோதியின் தமிழ் ஆர்வத்தை பற்றினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இருந்தாலும் ஒரு சில கேள்விகளையும் எழுப்பியாகத்தான் வேண்டும். தமிழைப் போற்றுவதுடன் நில்லாமல் வேறு சில பணிகளையும் அவர் செய்ய வேண்டும். அவற்றைச் செய்ய இயலாது என்றும் கூற இயலாது.
தமிழ் மொழி மேம்பாட்டுக்காகச் செம்மொழி தமிழாய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி போதிய ஆய்வாளர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், தமிழர்களின் ஜீவாதார உரிமைகளையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி நீர்ப் பங்கீட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை (Cauvery Management Board) மத்திய நீர் வளத் துறையின் கீழ் கொண்டுவந்ததை மாற்றி, முன்பு போல் தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் பலருக்கு ஹிந்தி மொழி மட்டுமே தெரியும் என்ற காரணத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹிந்தி மொழியில் மட்டுமே தகவல் பரிமாற்றம் அனுப்புவதை மாற்றி, ஹிந்தியுடன் ஆங்கிலத்திலும் அனுப்புவது தென்மாநிலத்தவர்களுக்கு மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கும் மன ஆறுதலை அளிக்கும்.
இவற்றையும் செய்தால் பிரதமர் நரேந்திர மோதியைத் தமிழால் வாழ்த்தலாம்!