• search
keyboard_backspace

சிறைக் காட்சிகள் அன்றும் இன்றும்...பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சிறைத் தண்டனை காட்சி 1

அப்போதைய ஆட்சியாளர்கள் போட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவர் 1908ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது ஏராளமானோர், "வந்தே மாதரம்" என்று குரல் எழுப்பினர். அப்போது அவருக்குச் சொந்தமாக இரு கப்பல்கள் இருந்தன. அது தவிர முன்னோர் சொத்துகளுடன் அவரே தன் தொழில் மூலம் ஈட்டிய கோடிக் கணக்கான சொத்துகளும் இருந்தன.

Senior Journalist Paa Krishnan Article on Sasikala returns to Tamilnadu

திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பிறகு லண்டன் பிரிவீயூ கவுன்சில் என்று பல அடுக்கு நீதிமன்றங்களின் விசாரணைக்குப் பிறகு, சிறைத் தண்டனை பெற்றார். பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், கேரள மாநிலம் கண்ணூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார்.

எல்லாம் எதற்காக நாட்டுக்காக. வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி புரியும் கொடுமையைத் தட்டிக் கேட்டதால், குரல் எழுப்பியதால்தான்! தங்களுக்கு எதிராக அவர் நடத்திய வணிகத்தையும் சதி செய்து மூடவைத்தனர் ஆங்கிலேயர்.

அவர் சிறையிலிருந்து ஜெயிலர் மிஞ்சேல் என்ற ஆங்கிலேயர் அவருக்கு இழைத்த கொடுமைகளோ ஏராளம். செக்கிழுத்தது, தேங்காய் நார் உரித்தது என உடல் ரீதியிலும் கொடுமை செய்தனர்.

1912 டிசம்பர் 24ம் தேதி அவர் விடுதலை ஆனபோது, அவரை வரவேற்கக் காத்திருந்தவர்கள் நான்கே நான்கு பேர்தான். அவரைக் கண்டால் ஆட்சியாளர்களுக்கே அச்சம் இருந்தது.

அவர்தான் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார்.

சிறைத் தண்டனை காட்சி 2

நூறாண்டுகள் கழித்து இவர் சிறை சென்றார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை, பின்னர் உயர் நீதிமன்றத்தில் விடுதலை, அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் குற்றத்துக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டு, நான்கு ஆண்டு தண்டனை பெற்று, 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் அதிகாரம் இல்லை. சிறைக்குச் செல்லும்போது பெரிய அளவில் கூட்டம் அவருடன் இல்லை.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். அவர் மாநிலத்துக்குத் திரும்பும்போது அவரை வரவேற்க ஏராளமானோர் திரண்டனர். சிறையிலிருந்து சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய அவருடன் ஏராளமான கார்கள் புடை சூழ்ந்திருந்தன. மகத்தான வரவேற்பு கிடைத்ததுடன், "தியாகத் தலைவி" என்ற பதாகையும் வரவேற்பு சுவரொட்டியும் எல்லா இடங்களிலும் தென்பட்டன.

இவரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மறைமுகமாகப் போராட்டம் நடத்துகிறார். ஆளுகிற கட்சி எனக்குத்தான் என்பது முதல், ஆட்சி பீடம் எனக்குத்தான் என்பது வரையில் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.

இவர் பெங்களூர் சிறையிலிருந்து அண்மையில் விடுதலை பெற்று, தமிழகத்திற்கு வந்த வி.கே. சசிகலா என்று கூறத் தேவையில்லை.

நாம்தான் சிறை சென்ற தியாகிகளை நினைப்பதில்லையே, ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்களைப் பற்றித்தானே அதிகம் பேசுகிறோம், எழுதுகிறோம்.

ஒரு துயரமான விஷயம் சசிகலா ஊழல் புகாரில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றவர் என்று பேசும், எழுதும் அரசியல்வாதிகள் அத்தகைய ஊழலுக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் என்று யாராலும் கூற முடியாது. அதுதான் விநோதம்.

இதை விட விநோதம் புதுக்கோட்டையில் ஒரு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "அவர் தமிழகத்திற்கு வருகிறார். இனி நடக்கப்போவது நடக்கும்" என்று கூறியிருக்கிறார்.

இதுதான் ஏராளமான கேள்விகளைப் பற்ற வைக்கும் பேச்சு!

அப்படியானால், நடக்கப் போவது என்ன? ஸ்டாலின் எதைச் சொல்கிறார்?

'அண்ணா திமுகவைக் கைப்பற்றும் காய்களை வி.கே. சசிகலா நகர்த்தப் போகிறார். அது நடக்கும்' என்று அர்த்தமா?

'அதிமுகவில் குழப்பம் ஏற்படும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது நமக்குச் சாதகம்' என்பது பொருளா? அதாவது ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற கருத்தா?

இதனிடையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சசிகலா குறித்து செய்தியாளர் கேட்டதற்கு மு.க. ஸ்டாலின் "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிம்ம சொப்பனம்" என்று கூறியதைப் போல், 'ஆட்சியாளர்களுக்குக் கதி கலங்கப் போகிறது. அதுவரை நமக்கு அரசியல் லாபம்தான்' என்ற நிலைப்பாடா?

இதனிடையில் பாஜக மகளரணி தேசியப் பிரமுகர் வானதி சீனிவாசனிடம் சசிகலா வருகை, அவரது காரில் அதிமுக கொடி வைக்கப்பட்டது ஆகியவை தொடர்பாகக் கேட்டபோது, "அது அண்ணா திமுகவின் விவகாரம். அதில் பாஜகவுக்குப் பங்கு இல்லை" என்று கூறியுள்ளார். இது 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கருத்தைப் பிரதிபலிக்கிறதா?

காரணம், அண்மையில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுகவினரும் சசிகலா தரப்பினரும் ஒன்று சேருவது நல்லது என்ற கருத்தை பாஜக ஆதரவாளர் எனக் கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதன் அடிப்படையில் பார்த்தால், சசிகலா வருகை, அதிமுகவினரின் பீதி ஆகியவற்றைப் பார்த்து பாஜகவும் மனத்துக்குள் ரசிக்கிறதா?

காரணம் ஒன்று சசிகலா வருகையினால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பலவீனப்பட்டாலோ, மனத்தளவில் சோர்வு அடைந்தாலோ அது நமக்கு லாபம், கூட்டணியில் அதிக இடம் கேட்டு பேரம் பேசுவதற்கு அது கை கொடுக்கும் என்று பாஜக காத்திருக்கிறதோ?

இப்படி ஏராளமான கேள்விகள் தோன்றிவிட்டன. சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையை விட இத்தகைய கேள்விகளின் எண்ணிக்கை அதிகம்.

எது எப்படியோ, ஒன்று நிச்சயம், வ.உ.சி. போன்ற தியாகிகள் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, வரவேற்றவர்கள் நான்கே பேர்தான் என்று இருக்கலாம்.

அவரால் ஒரு கேள்வியும் எழவில்லை. ஒரு பதில் மட்டுமே காத்திருந்தது. வ.உ.சி. தியாகம் வீண் போகாது, நிச்சயம் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வெளியேறுவார்கள் என்று உறுதியோடு தேச பக்தர்கள் எல்லோரும் காத்திருந்தனர்.

இப்போது அப்படிக் காத்திருக்க தேச பக்தர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடத்தான் வேண்டும் போல இருக்கிறது.

English summary
Senior Journalist Paa Krishnan laments that it is disheartening to note that when the great freedom fighters like V.O. Chidambaram Pillai were received by only a few people, when they were released from prison after serving hard days. But ironically VK Sasikala, former aide of late J.Jayalalitha was received by hundreds of people with festive mood, after her conviction period for corruption case was complete.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In