• search
keyboard_backspace

அதிமுக பக்கம் கூட்டணி. திமுக பக்கம் குழம்பணி- தேர்தல் விருந்தில் கூட்டும் குழம்பும்!- பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

தேர்தல் என்பது அறுசுவை விருந்தைப் போன்றது. அதில் காரம் உண்டு, இனிப்பு உண்டு, புளிப்பு உண்டு கசப்பு உண்டு. மக்கள்தான் விருந்தில் போடப்படும் இலையைப் போல், பச்சையாக இருக்கிறதா, கிழியாமல் இருக்கிறதா என்றெல்லாம் இலை மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்படும். நீர் தெளித்து சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்வார்கள். வகை வகையாகப் பரிமாறி சாப்பிட்டு முடிந்ததும் அந்த இலை குப்பைத் தொட்டிக்குப் போய்விடும், காக்காயும் நாயும்தான் அதைச் சீண்டும்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலின் களத்தில் இந்த அறுசுவையும் உண்டு. கூட்டு நன்றாக இல்லாவிட்டால், குழம்பித்தான் போகும். அரசியல் கட்சிகளின் இடையில் இருக்கும் கூட்டு சரியாக அமைந்தால்தான் அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால், கட்சியினர் மட்டுமல்ல, வாக்காளர்களும் குழம்பித்தான் போவார்கள்!

Senior Journalist Paa Krishnan artilce on TN Assembly Election Alliances

தேர்தல் விருந்து இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. அதற்கு ராகுல் காந்தியும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் இலை போட்டு பரிமாறத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணியும், அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியும்தான் களத்தில் மோதலுக்குத் தயாராக உள்ளன என்பது சில மாதங்களுக்கு முன்பு இருந்தது. இது ராகுல் காந்தியின் கடந்த மாத வருகை அசைத்துவிட்டது.

ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி, சில தினங்களிலேயே கொங்கு மண்டலத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர் என்று பயணத்தை நடத்துகிறார். மீண்டும் அவர் தமிழகத்திற்கு வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அவர் வந்து பங்கேற்கும் கூட்டங்கள், பேரணிகள் எல்லாவற்றிலும் காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடப்படுகிறது. அந்த அரசியல் பயணங்கள் காங்கிரஸ் பயணமாகத்தான் இருக்கிறதே தவிர, கூட்டணி பயணமாக அமையவில்லை.

கடந்த காலங்களில் நடந்த கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் திமுகவுடன் அதன் கூட்டணிக் கட்சிகள் அழைக்கப்பட்டு, அவை பங்கேற்று வந்தன. இந்த முறை ராகுல் காந்தி, இன்னும் சொல்லப் போனால், ராகுல் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்.

திமுகவின் "ஸ்டாலின் வராரு, விடியல் தராரு" உள்பட பல நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார். மூத்த தலைவர்கள் யாரும் தென்படவில்லை. ஏன், கடந்த சில வாரங்களாக மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கூட தென்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அப்படியானால், அங்கே வேறொரு நகர்வு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ராகுல் காந்தியின் கூட்டங்களிலும் அப்படித்தான் நடக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, காங்கிரஸ் ஏதோ ஒரு முடிவில் இருப்பதை உணர முடிகிறது.

தங்களது கட்சியை திமுக மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறது என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள்.

இதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன் "எத்தனை காலம் பல்லக்கு தூக்க வேண்டும்?" என்று திமுகவின் மூத்த தலைவர் கேஎன் நேரு எழுப்பிய கேள்வியின் ஈரம் இன்னும் உலரவில்லை.

இவை ஒரு புறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் முடிவுக்குத் தலைமுழுக்குப் போட்டதை அடுத்து, உலக நாயகன் கமல்ஹாசன் சற்று உத்வேகம் அடைந்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் சுற்றுப் பயணம் செய்ததே அதன் முதல் அடையாளம். அத்துடன், அண்மையில் கட்சியின் பொதுக் குழு என்ற அமைப்பைக் கூட்டி விவாதித்திருக்கிறார். மாநாடு நடத்துவதாக அறிவித்தும் இருக்கிறார்.

கமல்ஹாசன் எல்லாக் கட்சிகளையும் தாக்கிப் பேசி வருகிறார். திமுகவைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. ஆனால், அவர் அதிகமாகத் தாக்காதது, ஏன் தாக்காமல் இருப்பது காங்கிரஸ் கட்சியைத்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியினரும் கமல் பெயரை எப்போதும் வம்புக்கு இழுத்ததில்லை. ஏன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கமல்ஹாசனுடன் கூட்டு சேருவதை வரவேற்றுப் பேசியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இந்த நகர்வுகள் ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன. தனது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் தங்களது உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என்று திமுக கூறியது சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ரவிகுமார் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். ஆனால், அதன் தலைவர் தொல். திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

இது சிக்கலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஒரு வேளை திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏதாவது முரண்பட நேர்ந்தால், திமுக கொறடாவின் உத்தரவை அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவரால் மீற இயலாது. மீறினால், கட்சித் தாவல் சட்டம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

சட்டப் பேரவையிலும் திமுகவின் சின்னத்தில் தாங்கள் போட்டியிட்டால், இதைப் போன்ற நிலை ஏற்படுமே என்ற காரணத்தால் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தன. இந்த நிலைப்பாட்டில் இன்னும் இறுதி நிலை உருவாகவில்லை. தற்போதைக்கு இதில் குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி என்ற மதில் மீது பூனையாகத்தான் இருக்கிறது.

கூட்டணி மாற்றம் என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. நெருக்கடி நிலையைப் பிறப்பித்த இந்திரா காந்தியின் அரசில் அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன் ராம் கடைசி நேரத்தில் முரண்பட்டு "சிஎப்டி" என்று அழைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, (Congress For Democracy) பின்னர் ஜனதாவுடன் இணைத்தார்.

1996ல் காங்கிரஸ் தூணாக இருந்த ஜிகே மூப்பனார் கடைசி நேரத்தில் கட்சியைத் தமிழகத்தில் உடைத்துக் கொண்டு திமுகவுடன் கூட்டு அமைத்தார். 2001ம் ஆண்டு திமுகவுடன் உறவை முறித்துக் கொண்ட பாமக ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதைப் போல் வைகோ தலைமையிலான ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை 2006ல் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக அணியில் சேர்ந்தன.

அதைப் போன்ற நிலைமை திமுக கூட்டணியில் நேரலாம் என்று கணக்கிடப்பட்டு வருகிறது.

பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில மாதங்களுக்கு முன் வரையில் அதிமுகவுடன் நீடிக்குமா இல்லையா என்ற கேள்வி இருந்தது. ஆனால், கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, பின்னர், அமித் ஷா ஆகியோர் கூட்டணியில் மாறுதல் இருக்காது என்பதை உறுதிபடுத்தினர்.

இவை ஒரு புறம் இருக்க மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே. சசிகலா தண்டனைக் காலம் பூர்த்தியாகி விடுதலை ஆனபோது அரசியல் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவினர் "பொது எதிரியான திமுகவை வீழ்த்த சசிகலாவும் அதிமுகவும் இணைய வேண்டும்" என்று குரல் எழுப்பினர்.

சசிகலா விடுதலை ஆனபோது ஓரிரு தினங்களில் பல மாறுதல்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி, சசிகலா ஆதரவாளர்களைக் கொண்ட டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் ஆளும் அதிமுகவை அதிகம் விமரிசிக்கவில்லை.

ஆனால், அத்தகைய அரசியல் நகர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி நரேந்திர மோடி மூலம் எழுப்பப்பட்டுவிட்டது. காரணம், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த தலைமையமைச்சர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளைப் பிடித்துத் தூக்கியதன் மூலம் மறைமுகமாகக் கூறிவிட்டார் என்றே தோன்றுகிறது. அவர்களது கையைத் தூக்கியதன் மூலம் அவர்களைக் கைவிடப் போவதில்லை என்பதை உணர்த்திவிட்டார். அத்துடன், தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் குறித்த அவரது அறிவிப்பு வேறு சில தகவல்களையும் உணர்த்திவிட்டது. அதை உடனே வரவேற்றவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இதன் மூலம் "அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து எங்கேயும் வெளியே போகவில்லை" என்று ராமதாஸும் கூறியதாக அமைந்துவிட்டது.

இரு தினங்களுக்கு முன் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என்று கூறிவந்த தேமுதிகவும் தனது குரலைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது.

சுருக்கமாகச் சொல்லப் போனால், திமுக கூட்டணியில் சலசலப்பு தொடங்குகிறது. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு புறம் தனியாக அணி அமைக்கக்க கூடும் என்பது தெரிகிறது.

தேமுதிக, பாமக, பாஜக எல்லாம் அதிமுக படகில்தான் சவாரி செய்யும் என்பதும் உறுதியாகிறது.

அதிமுக பக்கம் கூட்டணி. திமுக பக்கம் குழம்பணி என விருந்தின் பதார்த்தம் உள்ளது.

பார்க்கலாம், எது சுவையாக இருக்கிறது என்பதை!

English summary
Senior Journalist Paa Krishnan views that the polarisation of Political alliances are expected to change when the elections for the Tamil Nadu Assembly. The visits of leaders like Rahul Gandhi, Amit Shah, JB Nadda and Prime Minister Modi may have impact on such alliances, he adds.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In