For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவையில் கவிழ்க்கப்பட்ட நாராயணசாமி அரசு- புயல் வீசும் தேநீர்க் கோப்பை- பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

எல்லோரும் எதிர்பார்த்தது போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வி. நாராயணசாமி அரசு கவிழ்ந்துவிட்டது.

புதுவையில் ஆட்சிக் கவிழ்ப்பு, எம்எல்ஏ-க்கள் விலகல், கட்சி உடைவது எல்லாம் புதிதல்ல. ஆனால், நாராயணசாமி சந்தித்த சோதனைகள் ஏராளம்.

Senior Journalist Paa Krishnan writes on Pudhucherry Politics

பெயரில் "புது" என்று இருப்பதாலோ என்னவோ, புதுமையான நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் யூனியன் பிரதேசமாக பாண்டிச்சேரி என்ற புதுச்சேரி யூனியன் பிரதேசம் விளங்குகிறது.

துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியுடன் கடந்த நான்கு ஆண்டுகள் மல்லுக் கட்டி நின்றார் முதலமைச்சர் நாராயணசாமி. முதலமைச்சர் - துணை நிலை ஆளுநர் மோதல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்ததைப் பார்த்தால், வேறு .யாரும் அவரைப் போல் தாக்குப் பிடிப்பார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கும்.

ஒரு வழியாக கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டதும், இவருக்கு வேறு எப்படி குடைச்சல் தருவது என்று மேலிடம் சிந்தித்துக் கொண்டிருந்தது. துணைநிலை ஆளுநர் பொறுப்புக்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை நியமிக்கப்பட்டபோது, அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்பதால், பெரிதும் பாதிப்பு இருக்காது என்றே நாராயணசாமி தரப்பினர் கருதி வந்தனர். ஆனால், ஆபத்து எம்எல்ஏ.க்களிடமிருந்து வந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தடுத்து எம்எல்ஏ-க்கள் விலகியதால், தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கெடு விதித்திருந்தார். அப்போது சட்டமன்ற நியமன உறுப்பினர்கள் மூன்று பேரும் வாக்களிக்கக் கூடாது என்று நாராயணசாமி தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். காரணம், நியமன உறுப்பினர்கள் பாஜகவினர் என்பதுதான். அதிலும் ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்து நியமன உறுப்பினர் ஆகிவிட்டார் என்ற வாதத்தை வைத்துப் பார்த்தனர். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் அப்படியெல்லாம் இல்லை.

தமிழகத்தில் சட்டமேலவைக்கு நடந்த தேர்தலில் தோல்வியடைந்த ஜி. சுவாமிநாதன் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பரிந்துரைப்படி நியமன எம்.எல்.சி. ஆக ஆக்கப்பட்டார். அவருக்கு எம்.எல்.சி.க்கு உள்ள அனைத்து அதிகாரமும் இருந்தது.

இப்போது நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தடுக்க குரல் எழுப்பும் காங்கிரஸ் கட்சிதான் நியமன உறுப்பினர்களின் வாக்கினால், ஒரு காலத்தில் தப்பிப் பிழைத்து ஆட்சியை நடத்தியது என்பது வரலாறு.

புதுவையில் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் நடைபெற்று வந்தது. இதெல்லாம் 70, 80, 90ம் ஆண்டுகளில் எந்தக் கட்சியின் ஆட்சியும் முழுமையான பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்ததில்லை. பெரும்பாலான சமயம் சட்டமன்ற உறுப்பினர்கள் முரண்டு பிடித்ததால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. ஒரு முறை பட்ஜெட் மீதான மசோதாவில் தோல்வியடைந்து ஆட்சி வீட்டுக்குப் போனது.

ஒரு முறை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப் போதிய பலம் இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மூன்று நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதால், அவர்கள் ஆதரவோடு ஆட்சி தப்பியதுண்டு. அதையடுத்து நியமன உறுப்பினர்கள் நிலை நீடித்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால், அவர்களால்தான் ஆட்சிக் கவிழ்ப்பு இல்லாமல் இருந்து வந்தது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு முறை அவ்வாறு ஆபத்து நேராமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் (Government of Union Territories Act, 1963) படி 3 பேர் நியமன உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டனர். அவர்களை மத்திய அரசு நியமித்ததால், மத்தியில் இருந்த காங்கிரஸுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியும் கவிழாமல் நடைபோட்டது.

நியமன உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் வாக்களிக்கும் உரிமையை யூனியன் பிரதேச சட்டம் அனுமதிக்கிறது. அவர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இது போதாதா, மத்திய அரசின் கைப்பாவையாக புதுவை யூனியன் பிரதேச அரசு செயல்படுவதற்கு?

மத்திய அரசு நியமிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. ஆனால், அவர்கள் பெரும்பாலும் மத்திய ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களை வைத்து காங்கிரஸ் அரசு தப்பியது என்றாலும், இப்போது அதே நியமன உறுப்பினர்கள்தான் ஆட்சிக்கு வேட்டு வைத்துவிட்டனர். காரணம், புதுவையில் ஆட்சி செய்தது மத்திய ஆளும் கட்சியினருக்கு எதிரான காங்கிரஸ் கட்சி என்பதுதான் விஷயம்!

உண்மையில் நியமன உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசமைப்புச் சட்டத்தில் மூன்றுக்கும் மிகாதவர்களை நியமன உறுப்பினர்களாக அமர்த்திக் கொள்ளலாம் என்றுதான் இருக்கிறது. மூன்று நியமன உறுப்பினர்கள் இல்லாமல் கூட சட்டமன்றத்தில் போதிய பலம் இருந்தால், ஆட்சி தைரியமாக நடைபோடலாம்.

ஆனால், நாராயணசாமிக்கு இந்த அதிர்ஷ்டம் எல்லாம் இல்லாமல் போய்விட்டது.

கிரண்பேடியால் தலைவலியைச் சமாளித்த நாராயணசாமிக்கு இன்னொரு சிக்கல் நேர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய காணொலியும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிவிட்டது. ராகுல் காந்தியிடம் தமிழில் பேசிய ஒரு பெண் முதலமைச்சர் குறித்துப் புகார் சொல்ல, அதை அப்படியே மாற்றி ராகுலிடம் முதலமைச்சர் மொழி பெயர்க்க, சர்ச்சை கிளம்பியது. அதற்கு சமாதானம் சொல்லும் வகையில் விளக்கங்களைத் தரவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

இப்போது ஆட்சிக் கவிழ்ப்பும் நடந்துவிட்டது. அடுத்து என்ன நிகழப் போகிறது என்பது பல எதிர்பார்ப்பைக் கிளறியுள்ளது. சட்டமன்றம் கலைக்கப்படுமா, என் ரங்கசாமியின் கூட்டணி அரசு ஆட்சியமைக்குமா, அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படுமா என்ற காட்சிகளை ஓரிரு நாட்களில் புதுவைக் காணத்தான் போகிறது!

ஆங்கிலத்தில் A Storm in a Teacup (ஒரு தேநீர்க் கோப்பைக்குள் புயல்) என்று ஒரு சொலவடை உண்டு. தமிழில் "உழக்கில் ஏது கிழக்கு மேற்கு?" என்ற பழமொழியும் உள்ளது. அதன் பொருள், சின்ன விஷயத்தில் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப் போகிறது என்ற கருத்துதான். புதுச்சேரி யூனியன் பிரதேசம் சின்னதாக இருக்கலாம். ஆனால், 14 லட்சம் மக்கள் தொகை, நான்கே நான்கு மாவட்டங்கள், 483 சதுர கிமீ. பரப்பு மட்டுமே இருக்கும் யூனியன் பிரதேசத்தில் கொந்தளிக்கிறது அரசு.

இதைச் சாதாரணாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்! காரணம் அடுத்தடுத்து நிகழப் போகும் அரசியல் நாடகங்களுக்கு இதுதான் ஆரம்பம்!

English summary
Senior Journalist Paa Krishnan writes on the recent developments taking place in Pudhucherry Union Territory
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X