ஜியோ, ஏர்டெல் யூஸ் பண்றீங்களா.. ரீசார்ஜ் கட்டணங்கள் எல்லாமே குறைய போகுது! ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கே
டெல்லி: நமது நாட்டில் கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டன. இதனால் பயனாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக வெளிநாடுகளில் வைஃபை மூலமாக இணையத்தை அணுகுவதே அதிகமாக இருக்கும். அங்கெல்லாம் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் கணிசமாக அதிகமாகவே இருக்கும்.

ஆனால், இந்தியாவில் அதற்கு நேர்மாறான சூழல் தான். இங்கு வைஃபை கட்டணங்களுடன் ஒப்பிடும் போது செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைவாகவே இருக்கும். மக்கள் பலரும் இணையத்தை அணுக இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
கட்டண உயர்வு: இந்தச் சூழலில் தான் கடந்த ஜூலை மாதம் நாட்டின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இது வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் கூட இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தனர். இருப்பினும், கட்டண உயர்வுக்கு பிறகும் கூட உலகிலேயே இந்தியாவில் தான் மொபைல் கட்டணம் குறைவாக இருப்பதாக விளக்கம் தரப்பட்டது.
அதேநேரம் என்ன தான் தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் கூட அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் மீண்டும் பிஎஸ்என்எல் பக்கம் வந்தனர். தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து போர்ட் செய்து வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்தனர். அதுவும் சமீப காலத்தில் இது கணிசமாகவே அதிகரித்துள்ளது.
குறைய வாய்ப்பு: இதைச் சமாளிக்க இப்போது தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது நிறைவேறும்பட்சத்தில் கட்டணங்கள் வெகுவாக குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ஜியோ, ஏட்டெல், வோடவோன் நிறுவனங்கள் இணைந்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தது. நாட்டில் டெலிகாம் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தைக் குறைக்குமாறு இந்த அமைப்பு சார்பில் இப்போது அரசுக்குக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை: இப்போது 5 சதவீத நெட்வொர்க் பொறுப்புக் கட்டணம் உட்பட மொத்த வருவாயில் 8 சதவீதத்தை அரசு உரிம கட்டணமாக வசூலிக்கிறது. இந்த உரிமக் கட்டணத்தை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் ஆகக் குறைக்குமாறு இப்போது டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிம கட்டணத்தைக் குறைத்தால் நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கங்களை எளிதாக்கும் என்பதே அவர்கள் கோரிக்கையாகும்.
என்ன காரணம்: டெலிகாம் நிறுவனங்கள் இயங்க ஸ்பெக்ட்ரம் ரொம்பவே முக்கியம். முன்பு ஸ்பெக்ட்ரம் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப ஒதுக்கப்படும். அப்போது மொத்த வருவாயில் இத்தனை சதவிகிதம் என்று உரிம கட்டணத்தை வசூலிப்பது ஓகே.. ஆனால், கடந்த 2012 முதல் ஸ்பெக்ட்ரம் ஏல முறையிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் உரிம கட்டணத்தை வருவாய் உடன் இணைத்து வசூலிக்கக்கூடாது என்பதே இந்த நிறுவனங்களின் நிலைப்பாடு. நிர்வாகச் செலவுகளைக் கவர் செய்ய மட்டுமே உரிம கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்கிறார்கள்.
ட்விஸ்ட்: அதேநேரம் டெலிகாம் நிறுவனங்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே ரீசார்ஜ் கட்டணங்கள் குறையும். ஏற்கவில்லை என்றால் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை குறைக்காது என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications