For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலிருந்து கேமராமேன் ஆவிராஜுடன்.. நேரலை அக்கப்போர்கள்.. கதறும் நேயர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்னைக்கு எதை எடுத்தாலும் லைவ் டெலிகாஸ்ட் எனப்படும் நேரலை ஒளிபரப்பு தான். ஃபேஸ்புக்கில் லைவ் வந்துவிட்ட காலத்தில் அதற்கு ஈடுகொடுக்க வேண்டுமென செய்தி தொலைக்காட்சிகளும் முடிந்த வரை முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் காட்ட ஆரம்பித்துவிட்டன. இதில் தான் வில்லங்கமும் ஆரம்பமாகிறது.

கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. மெரினா போராட்டம் நடைபெற்ற போது இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்களை வெளியில் அழைத்துவர போலீசார் முயற்சிக்கின்றனர். இந்த செய்தி நேரலையில் அரங்கத்தில் இருக்கும் நெறியாளர் களத்தில் இருக்கும் செய்தியாளரிடம் நிலவரம் பற்றி கேட்கிறார். அப்படி கேட்கும்போது, அந்த இளைஞர்கள் மேலும் மேலும் கடலுக்கு உள்ளே சென்று கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு நீச்சல் தெரியுமா? அவர்களை கரைக்கு அழைத்து வர என்ன முயற்சி எடுக்கப்படுகிறது? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் செய்தியாளர், அந்த இளைஞர்களுக்கு நீச்சல் தெரியுமா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.. அது நமக்கு தெரியாது என்கிறார் கூலாக. இந்த கிளிப் தான் தற்போது வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

humorous incidents during tv live

இதைப் பார்த்ததும் முன்னணி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு இந்த நேரலை அக்கப்போர்கள் பற்றி விசாரித்தேன். அட இது பரவாயில்லைங்க, இதைவிட பயங்கர கொடுமையெல்லாம் நடக்குது என்று பெரிய பட்டியலையே எடுத்துவிட்டனர். அதில் சுவாரஸ்யமான சிலவற்றை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதாக தனக்கு தகவல் கிடைத்துவிட்டது என ஒரு முன்னணி செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் சொல்கிறார். உடனே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் என பிரேக்கிங் நியூஸ் போடுகிறார்கள். இதைப் பார்த்த வேறு சில ஊடகங்களும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதென செய்தி போடுகிறார்கள்.

humorous incidents during tv live

லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடிப்பது, இனிப்பு கொடுப்பது போன்ற காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. ஆனால் ஒரு சில நிமிடங்களில் இது வெறும் வதந்தி என்றும், இப்போதுதான் நீதிபதி தீர்ப்பை வாசிக்கிறார் என்றும் பெங்களூரு செய்தியாளர் கூறுகிறார். அப்போதும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் என்றே திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் ஜாமீன் லேது என தகவல் கிடைக்கிறது.

அப்போதும் அசராத அந்த செய்தி ஆசிரியர் முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன்? என்று பக்கத்தில் ஒரு கேள்விக்குறி போட்டு வண்டியை யூ டர்ன் போட்டு திருப்ப முயற்சிக்கிறார். பின்னர் அடுத்த சில விநாடிகளில் அதுவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு என்ற செய்தியாக மாறுகிறது. அதற்குள் செய்திப் பிரிவில் இருந்த ஒருவர் கோபாலபுரத்தில் கலைஞர் வீடு அருகில் நின்றுகொண்டிருந்த செய்தியாளரை தொடர்புகொள்கிறார். அங்கே யாரிடமாவது பட்டாசு இருந்தால் வெடிக்கச் சொல்லுங்கள், நமக்கு ஃபுட்டேஜ் தேவை என்கிறார். உடனே கோபாலபுரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழும் காட்சிகள் திரையில் காட்டப்படுகின்றன. இப்படித்தான் ஒரு செய்தியை தவறாக போட்டு விட்டாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சுவடே தெரியாமல் ஆக்கிவிடக் கூடியவர்கள் நம்ம லைவ் ஜாம்பவான்கள்.

லைவ் டெலிகாஸ்ட்டில் இன்னொரு வகை இருக்கிறது. அதாவது செய்தி கிடைத்த உடன் கூடவே செய்திக்கான காட்சியும் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புகள், விருது அறிவிப்புகள் போன்றவை இதற்கான உதாரணங்கள். பிற செய்திகளில் கூட காட்சிகளை உடனுக்குடன் அலுவலகத்திற்கு அனுப்பக்கூடிய லைவ் பேக் அல்லது ஓபி வேன் இருக்கும் இடங்களில்தான் காட்சிகள் உடனே கிடைக்கும். மற்ற இடங்களில் முக்கிய செய்தி என்ற உடன் அங்கிருக்கும் செய்தியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியை அப்படியே நேரலையில் வாங்கி விடுவார்கள். அப்போது திரையில் அந்த செய்திக்கு ஏற்ற கோப்பு காட்சி ஓட்டப்படும்.

ஒரு சமயம் தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கிறார்கள் என்று செய்தியாளர் தகவல் தருகிறார். உடனே அந்த செய்தி பற்றி தொலைபேசியில் கூடுதல் விவரங்களை கேட்டு ஒளிபரப்புகிறார்கள். அந்த செய்தியாளரும் தகவல்களை ரொம்ப விரிவாகவே விளக்கி சொல்கிறார். இதில் கொடுமை என்னவென்றால், இந்த இடிக்கும் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்று நெறியாளர் கேட்டதும், அதற்கு களத்தில் இருக்கும் செய்தியாளர் மிக நவீன உபகரணங்களைக் கொண்டு இடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்று கூறுகிறார். அப்படி அவர் கூறும் போது, திரையில் ஒரு ஊழியர் பெரிய உளியை பிடித்துக்கொண்டிருக்க மற்றொரு தொழிலாளர் பெரிய சுத்தியலால் அடிக்கும் காட்சி ஒளிபரப்பாகிறது. இதுதானா உங்கள் நவீன தொழில்நுட்பம் என்று சேனலின் யூ ட்யூப் கமெண்ட்டில் வந்து கலாய்த்துவிட்டார்களாம் நம்ம ஆட்கள். கோப்புக்காட்சியால் வந்த கோளாறு இது என்று அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.

பல நேரங்களில் கோப்புக்காட்சி என்று திரையில் போட்டுவிடுவார்கள். அப்படியும் சில வில்லங்கங்கள் வந்து சேரும். அப்படி ஒரு விநோத வில்லங்கத்தை நம்மிடம் விளக்கினார் ஒரு மூத்த செய்தியாளர். 2016 தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக அமைச்சரவை சட்டசபைக்கு போகிறது. முதல் கூட்டத்தொடர் பற்றிய செய்தி. வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் காட்சிகளை எடிட் செய்து செய்தி ஒளிபரப்புத்துறை மதியத்திற்கு மேல்தான் தருவார்கள். அது வரை முதல் நாள் கூட்டத்தொடர் அல்லது முந்தைய நாள் காட்சியை வைத்துதான் ஓட்ட வேண்டும். அப்போது கோப்புக்காட்சி என்று மேலே போடுவார்கள். ஒரு முன்னணி சேனலில் இப்படி முதல் கூட்டத்தொடரின் நான்காம் நாள் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. கோப்புக்காட்சி என்றும் போட்டிருந்தது. ஆனாலும் அது சேனலில் சிலருக்கு ஆப்புக்காட்சியாக மாறி விட்டது. காரணம், ஆளுங்கட்சி வரிசையில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா போன்றவர்கள் அமர்ந்திருந்த காட்சிதான் கோப்புக்காட்சியாக வெளியானது. அந்த இருவரும் இந்த தேர்தலில் ஜெயிக்கவே இல்லை என்பதுதான் கொடுமை. இதுகூட தெரியாமல் செய்தி போட வந்துவிட்டீர்களா என்று வந்து விழுந்த டோஸில் அரண்டுபோனது சேனல் தலைமை.

humorous incidents during tv live

பிரேகிங்கில் இன்னொரு பெரிய கண்ணிவெடி என்பது விஐபிகளின் மரணச் செய்தி. செய்தி கிடைத்தவுடன் மற்றவர்களுக்கு முன் ஃபிளாஷ் அடிக்க வேண்டும். அதேசமயம் செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அவசரத்தில் சில நேரங்களில் சரியாக உறுதிப்படுத்தாமல் அசிங்கப்பட்ட சேனல்கள் இருக்கின்றன. அப்படித்தான் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன் இறந்துவிட்டதாக ஒரு முன்னணி சேனலில் ஃபிளாஷ் நியூஸ் போட்டார்கள். ஆனால் அது வதந்தி என்று தெரியவந்தது. எப்படி தெரிய வந்தது தெரியுமா? "மரணமடைந்த" அந்த சுரேஷ் மேனனே சேனலுக்கு போன் பண்ணி, நான் இன்னும் சாகலை, செத்தால் சொல்றேன். இப்போதைக்கு இப்படி போடாதீங்க என்று சொன்னார். தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் "யப்பா சாமீகளா, நான் உயிரோடுதான் இருக்கிறேன். இதோ சற்று முன்னர் எடுத்த படம்" என்று ஆதாரத்தையும் வெளியிட்டு செய்தி போட்ட சேனல்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்திவிட்டார்.

இதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அதிரடி சரவெடி ஒன்றை ஒரு சேனலில் செய்தார்கள். அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல். புதிய ஓபி வேன் ஒன்றையும் வாங்கி இருந்தார்கள். ஆனால் அதில் இருந்து ஒளிபரப்பு செய்வதற்கான பேண்ட்விட்த் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் முடிந்தபாடில்லை. இருந்தாலும் அந்த சேனல்காரர்கள் பந்தாவாக தங்களின் ஓபி வேனை கொண்டு போய் கூட்டத்தில் நிறுத்தி லைவ் செய்வார்கள். நிறைய சேனல்கள் குறைந்த விலையில் லைவ் பேக் வாங்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் எப்படி கோடிகளில் கொடுத்து ஓபி வேன் வாங்கி, அதுவும் குறுகிய காலத்தில் நேரலையும் செய்கிறார்கள் என்று விவரம் தெரிந்த பலருக்கும் ஒரே வியப்பு.

humorous incidents during tv live

பின்னர் ஒருநாள் குட்டு வெளியானது. ஓபி வேன் போய் ஒரு இடத்தில் நின்றது, மேலே இருக்கும் குடை விரிந்தது, ஆனால் நேரலை காட்சி ஆபிசுக்கு போகவில்லை. எப்படி போகும்? காரணம் உள்ளே இருக்க வேண்டிய முக்கிய சமாச்சாரம் இல்லை. அதாவது ஓபி வேனை வெளியில் கொண்டு வரும்போதே உள்ளே ஒரு லைவ் பேக்கையும் வைத்து கொண்டு வருவது. பின்னர் காட்சிகளை வண்டிக்குள் இருக்கும் லைவ் பேக் மூலம் அனுப்புவது. வெளியில் பந்தா பண்ண ஓபி வேன், வேலை செய்ய உள்ளே லைவ் பேக். இதுதான் பிளான். விவரம் தெரிந்ததும் மொத்த இண்டஸ்ட்ரியும் மூக்கில் விரல் வைத்து வியந்தார்களாம். இது எப்படி இருக்கு?

ஆகவே, லைவ்களில் இதுபோல் ஆயிரம் வகை இருக்கு மக்களே. பெரியோர்கள் சொன்னது போல், கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லைவ் செய்திகளுக்கு ஆயிரம் மடங்கு பொருந்தும். அம்புட்டுதேன் சொல்ல முடியும்.

சரி சரி.. வாய் வலிக்குது பேசிப் பேசி.. போய்ட்டு அப்புறமா வர்றேன்.

- கௌதம்

English summary
TV live of News channels have lot of funny moments and here are some for you.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X