• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகங்காரம்.. அகந்தை.. திமிர்.. அத்தனையும் நொறுங்கிப் போய்.. கட்டாயம் பாருங்க "கள"!

Google Oneindia Tamil News

ஒரு படம் பார்த்தால்.. அப்படியே உள்ளே போய்ரணும்.. திரும்பி வரும்போது வித்தியாசமா உணரணும்... அப்படி உணர வைக்கும் ஒரு படமாக இந்த "கள" பரிமளிக்கிறது.

பயிர்களுக்கு இடையே ஊடுறுவி பயிர்களோடு பயிர்களாக வளர்ந்து வருவதுதான் களை. களையை வளர விட்டால் அது அந்தப் பயிர்களின் வளர்ச்சியை காலி செய்து விடும்.. உரிய சமயத்தில் களை எடுப்பதுதான் வளர்ச்சிக்கு உகந்தது.

வீட்டுக்குள்ளேயே இருப்பது ஒரே போர்.. பீச்சுக்குப் போக அப்பா காரைத் திருடிய 2 சிறுமிகள்!வீட்டுக்குள்ளேயே இருப்பது ஒரே போர்.. பீச்சுக்குப் போக அப்பா காரைத் திருடிய 2 சிறுமிகள்!

மனிதனிடமும் நிறைய களைகள் உள்ளன. எகத்தாளம், அகங்காரம், ஆணவம், திமிர், பொறாமை என நிறைய.. அதை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தி விட்டால்.. அவனை விட சிறந்த விஷயம் வேறு யாரும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு களை எடுக்கும் கதைதான் இந்த கள.. மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் இது..

கள

கள

தமிழிலும் வெளியாகியிருக்கிறது களை என்ற பெயரிலேயே.. ஆனால் மலையாளத்தில் படத்தைப் பாருங்கள்.. படம் முழுக்க அந்தக் கதையுடன் நீங்களும் கலந்து போய் விடுவீர்கள். படம் முழுக்க ரத்த சிதறல்கள் அதிகம்தான்.. அதை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் பிரமிக்க வைக்கும் சத்தான கதையை பார்த்து ரசிக்கலாம்.

வேட்டையாடப்படும் ஹீரோ

வேட்டையாடப்படும் ஹீரோ

மலையாளப் படங்களில் நாயகன், வில்லன், காமெடி போன்ற ராவடியெல்லாம் பெரிதாக இருக்காது.. எல்லோரும் சமம் என்பதுதான் மலையாளப் படங்களில் எழுதப்படாத விதி. அது இங்கும் தெளிவாக இருக்கிறது. படத்தின் ஹீரோ, கடைசியில் நாயைப் போல அடிபட்டு ரத்தம் சிந்தி கக்கூஸில் கொண்டு போய் உட்கார வைக்கப்படுகிறான்.. கிட்டத்தட்ட பன்றி வேட்டைக்கு நிகராக ஹீரோ வேட்டையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதுவே பெரிய துணிச்சல்தான்.

ஷாஜியின் திமிர்

ஷாஜியின் திமிர்

ஷாஜி ஒரு தலைக்கணம் பிடித்தவன். அப்பா சேர்த்து வைத்த சொத்தில் தின்று விட்டு செய்யும் தொழிலில் எல்லாம் நஷ்டத்தை மட்டுமே சம்பாதித்துக் கொண்டு, பிள்ளைக்கும் நல்ல விஷயத்தைச் சொல்லித் தராமல், மனசு முழுக்க திமிரும், அகங்காரமும், வன்மமுமாக வலம் வரும் இளைஞன். அவனுக்கு அழகான, அறிவான மனைவி.. ஆனாலும் மனைவி சொல்லைக் கேட்பதில்லை இவன். இவன் இஷ்டம்தான். அப்பாவுக்கு சுத்தமாக இவனைப் பிடிக்கவில்லை. இவனுக்கோ எதைப் பற்றியும் கவலை இல்லை. மனைவியிடம் ரொமான்ஸ், வெட்டித்தனமாக பணத்தை செலவழிப்பது, குடிப்பது, தான் வளர்க்கும் நாயுடன் விளையாடுவது என்று பொழுது போகிறது.

ஆதிவாசி தமிழன்

ஆதிவாசி தமிழன்

இந்த சமயத்தில் அவனது தோட்டத்தில் வேலை பார்க்க 3 ஆதிவாசி தமிழர்கள் வருகிறார்கள். அதில் ஒரு இளைஞன் தான் சுமேஷ் மூர் (படத்தில் இந்த கேரக்டருக்கு பெயரே கிடையாது என்பது விசேஷம்). சுமேஷ் மூர் ஒரு நாட்டு நாயை வளர்த்து வருகிறான்.. உசுரையே வைத்திருக்கிறான். ஆனால் திமிர் பிடித்த ஷாஜி ஒரு நாள் அந்த நாயை கறிக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்துக் கொடுத்து கொன்று விடுகிறான்.

மூர்க்கமாகும் மோதல்

மூர்க்கமாகும் மோதல்

மூர்க்கமாகிறான் மூர்.. ஷாஜியுடன் மோதக் கிளம்புகிறான். ஆனால் அவனை சாதாரணமாக எடை போடும் ஷாஜி, அடித்து துவைக்கிறான்.. உன்னை கொன்று புதைத்து விடுவேன் என்று திமிராகப் பேசுகிறான். அதன் பிறகுதான் மூர் விஸ்வரூபம் எடுக்கிறான்.. ஷாஜியை ஓட ஓட விரட்டுகிறான். உயிருக்குப் பயந்து ஓடும் ஷாஜியை அந்த தோட்டம் முழுக்க விரட்டி விரட்டி வெளுத்தெடுக்கிறான்.. கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கள படத்தின் மிச்சக் கதை.

ஈகோ

ஈகோ

படத்தின் ஆரம்ப பாதியில் இது என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்பதை யாருமே ஊகிக்க முடியாது.. ஆனால் மூர் கதாபாத்திரத்தின் அறிமுகத்திற்குப் பின்னர் கதை வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஷாஜியின் வெறியாட்டத்தை விட மூரின் மூர்க்கம் தான் படத்தை வெகுவாக தூக்கி நிறுத்துகிறது. சக மனிதனை துச்சமாக மதித்து தூக்கிப் போட்டு மிதிக்கும்போது அவன் வெகுண்டெழுந்து பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் அந்த மூர்க்கத்தனம் எப்படி இருக்கும் என்பதை மூர் கேரக்டர் மூலம் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இயக்குநர் ரோஹித்.

விரட்டி விரட்டி வேட்டை

விரட்டி விரட்டி வேட்டை

தனது நாயைக் கொன்றவனை விரட்டி விரட்டி பழி வாங்குகிறான் மூர். ஒவ்வொரு முறையும் ஷாஜியை அடிக்கும்போது அப்படி சந்தோஷப்படுகிறான். முகத்தில் ஒரு நாயின் வேட்கை வெளிப்படுகிறது. பன்றியை வேட்டை ஆடுவது போல துரத்தி துரத்தி, ரசித்து ரசித்து வெளுக்கிறான். இது எந்த சினிமாவிலும் இதுவரை நாம் பார்த்திராத ஒன்று.

உயிர்ப் பிச்சை

உயிர்ப் பிச்சை

மூரின் உயிரை துச்சமாக மதித்த ஷாஜி, கடைசியில் கக்கூஸில் போய் பதுங்கி வீழ்ந்து கிடக்கும் காட்சியில் மிகப் பரிதாபமாக காட்சி அளிக்கிறது அவனது ஹீரோயிசம். அடித்து துவைத்து வீழ்த்தி விட்டு.. பிழைச்சுப் போடா.. என்று ஒரு தம்மை இழுத்து விட்டு வெற்றிப் புன்னகையுடன் கிளம்பிப் போகிறான் மூர்.. அவனுடன் இணைந்து பயணிக்கிறது ஷாஜி வளர்த்த நாய். அந்த இடத்தில் ஹீரோ வீழ்ந்து கிடக்கவில்லை.. ஒரு மனிதனின் களைகளான திமிர், ஆணவம், பண பலம் உள்ளிட்ட எல்லாமே வெட்டி வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது.

மிரட்டல் நடிப்பில் டொவினோ

மிரட்டல் நடிப்பில் டொவினோ

ஷாஜியாக மிரட்டியிருக்கிறார் டொவினோ தாமஸ். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவரே. படம் முழுக்க பின்னி எடுத்திருக்கிறார். சுமேஷ் மூர், ஆதிவாசி இளைஞனாக மிகப் பிரமாதமாக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் என்ற ஜெயன்ட் நடிகனை தனது அனாயசமான நடிப்பால் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார். படத்தின் இசை மிகப் பெரிய பலம். டான் வின்சென்ட் மிரட்டியிருக்கிறார். கேமராவும் ஒரு பக்கம் பீதியைக் கிளப்புகிறது.

இயல்பான சண்டைக் காட்சிகள்

இயல்பான சண்டைக் காட்சிகள்

சண்டைக் காட்சிகளில் மூரும் சரி, டொவினோ தாமஸும் சரி மிக மிக இயல்பாக நடித்துள்ளனர். டூப் போடாமல் பல காட்சிகளில் நடித்திருப்பதால் படத்தின் இயல்பு கெடாமல் அனைவரும் அதில் இயைந்து போகும் அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளன. படம் முடிந்து மூர் கேட்டைத் திறந்து கொண்டு போகும் போது அத்தனை பேரும் அவனுடன் சேர்ந்து போவது போன்ற பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வயலன்ஸ் அதிகம்தான்.. ரத்தக்களறியும் அதிகம்தான்.. குழந்தைகளோடு பார்க்க முடியாது. அவர்களுக்கான படமும் இது அல்ல.. என்றாலும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். அமேஸான் பிரைமில் படம் இருக்கிறது. பாருங்க, ரசிங்க.

English summary
Tovino Thomas starrer, Malayalam Movie 'Kala' released in OTT platform, is a must watch movie during this lock down. Kala is said to revolve around a special relationship between a man and his pet dog. A dog named Bazigar is said to be playing a key role in the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X