• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அவங்க வீட்டுல என்ன நடக்குது?.. ஆங்.. இதுதாங்க பிக் பாஸ் வெற்றியோட சூட்சுமம்!

|

சென்னை: நம்ம வீட்டில் கரண்ட் போனவுடன், நமக்கு வரும் முதல் கவலை அடுத்தவர் வீட்டுக்கும் கரண்ட் போய்விட்டதா என்று எட்டிப் பார்ப்பதுதான். அங்கும் போய்விட்டால் நிம்மதி. ஆனால் போகவில்லையென்றால் அவ்வளவுதான்? அந்த வீட்டுக்கு மட்டும் கரண்ட் இருக்கிறதே என்ற பொறுமல்தான் நிலவும். இதுதான் தமிழக மக்களின் இயல்பு மனநிலை.

இந்த யுக்தியைதான் பிக்பாஸ் பயன்படுத்தி கொண்டுள்ளது. அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆவல் உள்ளவர்களுக்கான நிகழ்ச்சிதான்
இது. கோடி ரூபாய்களில் செட்டிங் போட்டு, கோடிகளில் நிகழ்ச்சிக்கு செலவு செய்து, கோடிகளை திரும்ப அள்ளும் 100 சதவீத அக்மார்க் விளம்பர நிகழ்ச்சி.

அடுத்தவர் வீட்டை ஆவலுடன் எட்டிப் பார்க்கும் மக்களின் மனஓட்டம்தான் இந்த நிகழ்ச்சியின் ஜீவநாடியே, மக்களின் அந்த மனஓட்டத்தை வைத்தே, கலாச்சாரத்தையும் சீரழித்து, காசும் பார்த்து வருகிறது ஒரு கும்பல்.

 மனசு கெட்டுபோனால் என்ன பதில்?

மனசு கெட்டுபோனால் என்ன பதில்?

பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண்களையும் பெண்களையும் அரைகுறை ஆடைகளோடு திரியவிட்டு அதை படம் பிடித்து வக்கிரத்தை தூண்டி இப்படி ஒரு விளம்பரங்கள் தேவையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. எத்தனையோ இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள், விவசாயிகள் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறாகள், வெளியே போனால் பெண் குழந்தைகள் வீடு திரும்புவது நிச்சயம் இல்லாததாக இருக்கிறது. இதை பற்றியெல்லாம்கூட கவலைப்பட வேண்டாம். பொழுதுபோக்கு அம்சங்களை தருகிறோம் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளுக்கு வரம்பு, எல்லை, ஏதாவது உண்டா? அத்துமீறும் பாலியல் சீண்டல்களுக்கும், சரளமாக தெறித்து விழும் இரட்டை அர்த்த பேச்சுக்களுக்கும் கட்டுப்பாடு ஏதும் இருக்கிறதா? கெட்ட வார்த்தை வந்தால் பீப் சத்தம் போட்டால் போதுமா? அதனையாவது வார்த்தைகளில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் சதைகளை காட்டி நடமாடும் காட்சிகளை கண்டு இளைஞர்கள் மனம் கெட்டு போனால் அதற்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்ய போகிறீர்கள்?

 நம் கலாச்சாரம் தெரியும்தானே?

நம் கலாச்சாரம் தெரியும்தானே?

வெளிமாநில இளம் பெண்களை வைத்து நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்ததே முதல் தவறு. அவர்களது உடை, கலாச்சாரம், பழகும் முறை என்னவென்று உங்களுக்கு தெரியாதா? தமிழகத்தின் பெண்களின் கலாச்சாரம் தெரியாதா? தெரிந்தும் வெளிமாநில பெண்களை போட்டியாளராக அனுமதிப்பது திட்டமிட்ட ஒன்றுதானே? கேட்டால், அது அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று சொல்லி நாசூக்காக தப்பித்து கொள்வதா? ஆனால் அந்த கன்றாவிகளை குடும்பத்துடன், குழந்தைகளுடன் பார்ப்பது நாங்களாயிற்றே? ஒளிபரப்புவது தமிழ்நாட்டில் ஆயிற்றே? எங்கள் குழந்தைகள் அந்த பெண்களைபோல நடந்து கொள்ள வேண்டும், அவர்களை போல ஆடை அணிய வேண்டும் என்றால், எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வது?

 உணர்வுகளை வியாபாரமாக்குவதா?

உணர்வுகளை வியாபாரமாக்குவதா?

60 காமிராக்களா? எதற்கு இவ்வளவு கேமிராக்கள்? ஒருவர் உண்மையானவரா, பொய்யானவரா என்பதை கண்டறியவா? 60 இல்லை 60 ஆயிரம் கேமிரா வைத்தாலும் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டறிய முடியாது, தீர்மானிக்க முடியாது. காலங்காலமாக கூடவே குடும்பம் நடத்தும் சில மனைவி, கணவன், பெற்ற பிள்ளைகளின் உண்மை நிலை பற்றியோ, அவர்கள் உண்மையா, போலியா என்பதையே கண்டறிய முடிவதில்லை. காமிராக்களை வைத்து எது கண்காணிக்கப்படுகிறது? போட்டியாளர்களின் பேச்சா, மனமா, குணமா? மனிதர்கள் என்றாலே குறையுள்ளவர்கள்தானே? அனைவரிடத்திலும் ஒவ்வொரு குறை இருக்கத்தானே செய்யும்? டாஸ்க் என்ற பெயரில் விளையாட்டுக்களோ, போட்டிகளோ, நடைபெற்றால், மனித இயல்புகள் அப்போது வெளிப்படத்தான் செய்யும். அப்போது அவர்களிடமுள்ள இயற்கை குறைகளான கோபம், சிரிப்பு, ஆத்திரம், அழுகை, என பீறிட்டு வரத்தானே செய்யும். இயல்பாக வெளிப்படும் அந்த உணர்வுகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, டிஆர்பி ரேட் ஏற்றி வியாபாரமாக்குவதா?

 என்ன செய்தது இந்த ஆர்மி?

என்ன செய்தது இந்த ஆர்மி?

ஆர்மி! மழை, உறைபனியில் கிடந்து, உண்மையிலேயே நாட்டிற்காக பாடுபட்ட ராணுவ வீரர்கள் ஆர்மியில் போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களில் யாரையாவது ஒருவரை நாம் ஹீரோவாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? அவர்களில் யாரையாவது நம் குழந்தைகளுக்கு அடையாளப்படுத்தி காட்டியிருப்போமா? ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஆர்மி உருவானது. ஆனால் இந்த ஆர்மி எதை பாதுகாத்தது? யாரை காப்பாற்றியது? நடிகர், நடிகைகள் பின்னாலேயே போய் போய் நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து கொண்டிருக்கும் நிலைமை எப்போது குறையுமோ தமிழகத்தில்? அதன் வெளிப்பாடுதான் இந்த ஆர்மி போன்றவை எல்லாம். இந்த ஆர்மியை உருவாக்கியதில் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இருக்கா? பொதுமக்கள், அந்த ஆர்மியை உருவாக்கி கொடுத்ததன் விளைவு, குறிப்பிட்ட அந்த நபரை லட்சங்களிலிருந்து கோடிகளுக்கு உயர்த்தி அதில் புரள விட்டதுதான். அவ்வளவே. வேறு ஒன்றும் உயர்த்தியவர்களுக்கு கிடையாது, போதாக்குறைக்கு எதிர்ப்பு, கிண்டல், கேலி, செய்கிறேன் என்ற பெயரில் மீம்ஸ்களை இளைஞர் பட்டாளம் அவிழ்த்துவிட, அதுவும் கூடபணமழையாகத்தான் அவர்களுக்கு பொழிந்து வருகிறது. இப்படியே மற்றவர்களை உயர்த்திவிட்டு உயர்த்திவிட்டு அவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே சாமான்யர்கள் வாழ்க்கையை ஓட்டிகொண்டிருப்பது சரிதானா?

 நாங்கள் எப்படி நம்புவது?

நாங்கள் எப்படி நம்புவது?

60 கேமிராக்கள் படம் பிடித்த காட்சிகளையெல்லாம் முழுவதுமாகத்தான் ஒளிபரப்புகிறீர்களா? 24 மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம்தானே காட்டப்படுகிறது? மீதி நேரம் காட்டப்படுவதில்லையே? அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்? அங்கு என்னென்ன வரைமுறைகள், சட்டதிட்டங்கள், நடக்கின்றன, மீறப்படுகின்றன என்பது எங்களுக்கு எப்படி புரியும்? அதையெல்லாம் காட்டாமல் ஒருசில மணி நேரத்தை ஒளிபரப்பினால், அது தான் உண்மைதன்மை என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீங்கள் அங்கு நடைபெற்ற கெட்ட நிகழ்வுகளை மறைத்து நல்லதை மட்டும் கொடுக்கலாமே? அல்லது நல்லதை மறைத்து டிஆர்டி ரேட் ஏற்ற கெட்டதை மட்டும் எடிட் பண்ணி கொடுக்கலாமே? எப்படி உங்களை நம்புவது? தினமும் காணாமல் போகும் 22 மணி நேரத்தை வைத்துக்கொண்டு இது "100 நாள் நிகழ்ச்சி" என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

 கமலுக்கு இது அழகில்லை

கமலுக்கு இது அழகில்லை

இந்த நிகழ்ச்சிக்கு கமலை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? கமல் ஒரு வித்தகர். அறிவுஜீவி. உச்சநட்சத்திரம், சமூக அக்கறை நிறைந்தவர், எதையுமே புதிய கோணத்தில் அணுகும் வல்லமை படைத்தவர், மனதில் நினைத்ததை அப்பட்டமாக தெரிவிக்க கூடியவர், எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் தன் புத்திசாதுர்யத்தால் சமாளிக்க கூடியவர். இப்படி பல வகையிலும் அனுகூலம் தரும் கமலை சாதுர்யமாக அழைத்து வந்துவிட்டார்கள். கமலும் தனது அரசியல் வருகையை அறிவிக்கும் மேடையாக பிக் பாஸை கமல் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருமுறை கமலிடம், அவரது குடும்ப வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில், "அடுத்த வீட்டின் ஜன்னலை ஏன் எட்டி பார்க்கிறீர்கள்?" என்றார். இப்போது ஒரு வீட்டினுள் நடக்கும் விஷயங்களை எட்டிபார்க்கும்படியும், எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதும், அதனை தொகுத்து கொடுத்து கொண்டிருப்பதும் சரிதானா? ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக்கிய கமலஹாசனே இதனை செய்யலாமா? மாநில பிரச்சனைகள், மாநாடு, கட்சி கூட்டங்கள், மக்கள் நலன் என்று ஒருபுறமும், மற்றொருபுறம் இதுபோன்ற கலாச்சார அழிவிற்கு துணை போய் கொண்டிருப்பதும் கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனுக்கு அழகில்லை.

 உச்சக்கட்ட தந்திரம் இது

உச்சக்கட்ட தந்திரம் இது

இந்த நிகழ்ச்சி விளம்பரங்களை அடிப்படையாக கொண்டது. விளம்பரங்களோ டி.வி.பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டவை. வியாபாரிகளின் உச்சக்கட்ட தந்திரம்தான் இப்படி சீசன் சீசனாக வடிவெடுத்துள்ளன. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான மக்கள் பார்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு விளம்பரம் கிடைக்கும். எனவே, அதிகமான மக்கள் பார்ப்பதற்கு என்ன செய்வது? அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட வேண்டும். அதிலும் குறிப்பாக மலிவான உணர்ச்சிகளை உசுப்பிவிட வேண்டும். இதற்காகத்தான் மட்டமான சம்பவங்களையும், மோசமான வார்த்தைகளையும் தவறாமலும் மறக்காமலும் ஒளிபரப்பிவிடுகிறார்கள்.

 டிஆர்பி எனும் கோரபசி

டிஆர்பி எனும் கோரபசி

அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளுமே அதை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அமையும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி தேவை. இதுபோன்ற நச்சுகளை புறம்தள்ளப் பழகினோமானால் விளம்பரங்கள் மூலம் பணம் கொழிக்கும் வியாபாரிகளும் தங்களை மாற்றிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போய்தான் ஆக வேண்டும்.இதுபோன்ற போங்கு நிகழ்ச்சியில், டிஆர்பி என்னும் கோர பசிக்கு பெண்கள், இளைஞர்கள் வீழ்ந்துவிடாமல், உங்கள் உணர்வுகளை கொண்டே காசு பார்த்துவரும் கும்பலுக்கு துணை போகாமல் தயவு செய்து விழித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நாம் ஏமாந்த சோனாங்கிரிகளாகவே ஆக்கப்பட்டுவிடுவோம் கடைசிவரை.

English summary
The public must ignore the Big Boss program
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X