For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேண்டவே வேண்டாம் அய்யா.. சொத்து வந்தா கூடவே சண்டையும் வரும்.. சபாஷ் ரமணியம்மா!

Google Oneindia Tamil News

சென்னை: போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வதைப் போல, அன்று எதுவுமே இல்லாதிருந்த எனக்கு இன்று உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் உள்ளது எனக்குப் பேராசை எதுவுமில்லை என்று ஜீ டிவி புகழ் பாடகி ரமணியம்மாள் தெரிவித்துள்ளார்.

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இப்படிக் கூறி நெகிழ வைத்தார் பாடகி ரமணியம்மாள். ஜீ டிவியில் சரிகமப நிகழ்ச்சியில் பல்வேறு நபர்களை நல்ல நிலைமைக்கு உயர்த்தி வருகிறது. அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜீ டிவி மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

zee tv fame ramani ammal feels very happy about her fame

அந்த வகையில் ஜீ டிவியில் சரிகமப இசை நிகழ்ச்சியில் ரமணி பாட்டி வெற்றி பெற்று உலகத்தில் அனைத்து மக்களிடம் இடம் பெற்றவர் . இவர் சமீபத்தில் இலங்கையில் இசை கச்சேரிக்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் எமது ஒன் இந்தியா இணையதளத்திற்காக நமது செய்தியாளர் பேட்டி கண்டார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு ரமணி பாட்டி சளைக்காமல் பதில் அளித்தார்.

கேள்வி: தங்களைப் பற்றிக் கூறுங்கள்...?

பதில்: என் பெயர் ரமணியம்மாள். 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து, மிகுந்த அவதிகளுக்கிடையில் என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், பால சாண்டில்யன் அவர்களும், அவர்களோடு சாய் சாரும் என்னை 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி அலைவரிசை நடத்தும் 'சரிகமப' நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டனர். அதில் தொடர்ந்து பாடி, இரண்டாமிடத்தைப் பெற்று, அதற்காக பரிசும் பெற்றுள்ளேன். பொருளாதாரத்தில் இன்று நான் தன்னிறைவோடு இருப்பதற்கு அவர்தான் காரணம். என் வாழ்நாள் உள்ளளவும் அவருக்கு நான் நன்றியோடு இருப்பேன்.

வீட்டு வேலைகள் செய்து, நான் வெறும் பத்து ரூபாய்க்குக் கூட திண்டாடிய அந்தக் காலத்திலும் கூட, பசி என யார் வந்தாலும் என்னிடம் இருப்பதைக் கொடுத்து மகிழ்வேன். அந்த ஒன்றுக்காக கடவுள் எனக்குச் செய்த அருளாகவே இதைப் பார்க்கிறேன். 'ஜீ தமிழ்' டிவியில் நான் போட்டிகளில் பாடப்பாட, எனக்கான தொகைகள் அவ்வப்போது தரப்படும். அவற்றை அப்படியே என் மக்களிடம் கொடுத்துவிடுவேன். இதுவரை வந்தவற்றையும் அப்படித்தான் நான் செய்திருக்கிறேன்.

zee tv fame ramani ammal feels very happy about her fame

'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் நான் பாடுகையில் நடுவர்களாக இருந்து, என் திறமையை மதித்து வெளிக்கொணர்ந்த நடுவர்களையும் என்னால் மறக்க இயலாது. திரு. ஸ்ரீனிவாசன், திரு. விஜய் ப்ரகாஷ், திரு. கார்த்திக் ஆகிய அந்த மூவரும் என் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகிவிட்டவர்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளினி அர்ச்சனா மேடம் அவர்கள்தான் நான் பாடிய முதற்சுற்றிலேயே 'ராக்ஷா ரமணியம்மாள்' என்று எனக்குப் பெயரிட்டு அழைத்தார். இன்று அந்தப் பெயரால்தான் நான் உலகம் முழுக்க அறியப்பட்டிருக்கிறேன்.

அதுபோல - டேவிட், இமேஷ், முருகன் இப்படி அந்தச் சேனலின் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட குழுவினர் யாரையும் என்னால் மறக்க முடியாது. மொத்தத்தில் அந்தச் சேனலே எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது.

ஏற்கனவே 25 திரைப்படங்களில் நான் பாடியிருந்தபோதிலும், வெளியுலகில் அவ்வளவாக அறியப்படாதவளாகவே இருந்தேன். 'ஜீ தமிழ்' டீவியில் பாடிய பிறகு என் நிலையே மாறிவிட்டது. ஜுங்கா, சண்டக்கோழி 2, காப்பான், தணல், வசந்தம் வந்தாச்சு, சேர நாட்டு தங்கம் என சுமார் பத்து படங்களுக்குப் பாடியிருக்கிறேன். கடவுள் நினைத்துவிட்டால் ஒருவரை எந்தத் தருணத்திலும், எவ்வளவு வயதில் இருந்தாலும் மேலே கொண்டு வரலாம் என்பதற்கு நான் உதாரணமாகிவிட்டேன்.

மக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் ஒளிந்துகொண்டுதான் இருக்கும். அவர்கள் தயங்காமல் தமக்குள் ஒளிந்திருக்கும் அத்திறமைகளை வெளிப்படுத்தி முன்னுக்கு வருவதற்கு எனது இந்த முன்னேற்றம் தூண்டுகோலாய் அமைந்தால், அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியே. அதற்கு ஒவ்வொருவரும் முதலில் தமது திறமைகளை அவரவர் அறிந்துகொள்ள வேண்டும்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்...
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்...

என்ற பாட்டு இந்த நேரத்தில் மிகப் பொருத்தமாக உள்ளது. இந்தப் பாடலை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நான் வீட்டு வேலைகளையும் செய்து கொண்டே - எனது பாடும் திறமையை அறிந்தவளாக - ஒவ்வோர் இடத்திற்கும் தயங்காமல், சோர்வடையாமல் சென்று வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருப்பேன். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் பாடிய பிறகு எனக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. எனது விடா முயற்சி, என் திறமை மீது எனக்கிருந்த நம்பிக்கை ஆகியவை காரணமாகவே என் திறமை 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி மூலமாக உலகால் அறியப்பட்டது. இன்றும் நான் பத்து வீடுகளில் வீட்டு வேலை செய்துகொண்டே - பாடவும் சென்று வருகிறேன். ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. வீட்டு வேலையைச் செய்து கொண்டு, இது நமக்குத் தேவையா என ஒருபோதும் நான் நினைத்ததில்லை.

கேள்வி: எந்தெந்த நாடுகளுக்குச் சென்று பாடியிருக்கிறீர்கள்?

பதில்: சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் சாய் சார்தான் என்னை அழைத்துச் சென்று பாடச் செய்தார். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் நான் பாடிக் கொண்டிருந்தபோதே இலங்கையின் பல பகுதிகளிலும் சென்று பாடியிருக்கிறேன். அண்மையில் குவைத் நாட்டிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபை, அபூதாபீ நகரங்களிலும் பாடியிருக்கிறேன். 2020 ஜனவரி 23ஆம் நாளன்று மீண்டும் இலங்கை சென்று இசை நிகழ்ச்சியில் பாடி இருக்கிறேன்.

zee tv fame ramani ammal feels very happy about her fame

கேள்வி: இளவயதைத் தாண்டிய நிலையில் நீங்கள் பாடகராக உலகுக்கு அறிமுகமாகியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி! இதுபோல, வயது கூடிய நிலையில் வேறு திறமையாளர்கள் உள்ளதாக அறிகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக இருப்பார்கள். அப்படி திறமையுள்ளவர்கள் என்னைப் போல தளராமல் தமக்கான களத்தைத் தேட வேண்டும். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியும் தகுதியும், திறமையும் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதை ஒரு செயல்திட்டமாகவே வைத்திருக்கிறார்கள். ஆடல், பாடல், பலகுரல்களில் பேசல் என எந்தத் திறமை இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கேள்வி: உங்கள் திறமைக்காக என்னென்ன விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறீர்கள்?

பதில்: நிறைய வாங்கியிருக்கிறேன். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் பாடி, உலகுக்கு அறிமுகமான பிறகு, 'ஏஷியாநெட்' தொலைக்காட்சியில் பாட அழைத்தனர். அங்கு பாடியதற்காக எனக்கு விருதும் தந்தனர். குவைத், அபுதாபி ஆகிய இடங்களிலும் விருதுகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி நகரங்களில் நான் பாடியதற்காக தங்க மோதிரம் வழங்கப்பட்டது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்புத் தொகை வழங்குகிறார்கள். ஆங்காங்கே கச்சேரிகளில் பாடியமைக்காக என் பெயர் பொறிக்கப்பட்ட பல விருதுகள் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளும், நினைவுப் பரிசுகளும் உள்ளன.

கேள்வி: திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு எதுவும் வந்துள்ளதா?

பதில்:ஆம், வந்துள்ளது. 'வட்டியும், முதலும்' படத்தில் நடிக்கிறேன். 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி ஒளிபரப்பும் 'செம்பருத்தி', 'யாரடீ நீ மோகினி', 'நாச்சியார்புரம்' ஆகிய நாடகங்களில் நான் பாடியும், பாடல் காட்சிகளில் நடித்தும் இருக்கிறேன்.

கேள்வி: 'வட்டியும், முதலும்' படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

பதில்: பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்திலுள்ள ஓர் அண்ணனின் மனைவியாக - அண்ணியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே என் வாழ்க்கையே அப்படித்தான் அமைந்திருந்தது என்பதால் என்னால் இயல்பாகவே அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றிப் போக முடிந்துள்ளது. வரும் 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் சில ஒளிப்பதிவுகள் உள்ளன. அவற்றுடன் என் கதாபாத்திரத்திற்கான காட்சிகள் முடிவடைந்துவிடும்.

கேள்வி: வேறு பட வாய்ப்புகள் எதுவும் வந்துள்ளதா?

பதில்: இதுவரை இல்லை. எப்படி நான் முதன்முதலாக 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் பாடிய பிறகு நிறைய வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தனவோ அதுபோல, இந்த 'வட்டியும், முதலும்' படம் வெளிவந்த பிறகு எனக்கு அப்படியான வாய்ப்புகள் வரலாம்.

கேள்வி: துவக்கத்தில் உங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவில் இருந்ததாகவும், இப்போது நிலை மாறிவிட்டதாகவும் கூறியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப நிலை எப்படி இருக்கிறது என்று கூற இயலுமா?

பதில்: பாடியே சொல்கிறேன்...

சரிகம...ப... மேடையால்
கிடைத்த வாழ்க்கை மறக்குமா...?
ஆறு மாதங்கள் பாடினேன்...
நான் விண்வெளி...யில் பறக்கின்றேன்...

எங்கோ மூளையில் கிடந்த என்னை
உலகறியச் செய்ததே ஜீ தமிழ்...
அன்று வறுமையில் எனது வாழ்க்கை...
இன்று செழுமையில் எனது பயணம்...

வறுமையில் இருந்த நான் இன்று இறையருளால் செழுமையில் இருக்கிறேன். நான் செழுமையாகிவிட்ட காரணத்தால், என் மக்கள் என்னைப் போல வறுமையில் வாடாமல் செழுமையாக உள்ளனர். அன்று அந்த வறுமையிலும் பத்து ரூபாய் தர்மம் செய்த எனக்கு இன்று தாராளமாக தர்மம் செய்ய முடிகிறது. கை - கால் இல்லாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அன்றே நான் முன்சென்று உதவுவேன். இன்று அதை இன்னும் அதிகளவில் செய்கிறேன்.

நம் வாழ்க்கை பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலானது. இதில் என்னால் இயன்ற நல்லதை மட்டுமே செய்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று கருதுகிறேன்.

கேள்வி: சொந்தமாக வீடு எதுவும் கட்டியிருக்கிறீர்களா?

பதில்: அப்படி எதுவும் இல்லை. வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். நான் எனது திறமை வாயிலாகப் பெறும் பணத்தை அப்படியே என் மக்களிடம் கொடுத்துவிடுவேன்.

கேள்வி: இப்போது உங்களுக்கு ஓரளவுக்கு நல்ல வருமானம் வருகிறதுதானே? சொந்த வீடு கட்டும் எண்ணம் உள்ளதா?

பதில்: வேண்டவே வேண்டாம் அய்யா! சொத்து என்று வந்துவிட்டாலே சண்டை தானாக வந்துவிடும். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சொல்வதைப் போல, அன்று எதுவுமே இல்லாதிருந்த எனக்கு இன்று உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் உள்ளது... இவையே போதும் என்று நினைக்கிறேன். இவற்றைத் தாண்டி எனக்குப் பேராசை எதுவுமில்லை.

இந்த உலகில் பிறந்த போது நான் எதையும் கொண்டு வரவுமில்லை... போகும்போது எதையும் எடுத்துச் செல்லப்போவதும் இல்லை. இடைப்பட்ட இந்த வாழ்க்கையில் எனக்கெதற்கு சொந்த வீடெல்லாம்? கஷ்டப்பட்ட என்னை கடவுள் இன்று நன்றாக வைத்திருக்கிறார். கஷ்டப்பட்டு முன்னேறியதால் என்னால் என் செழுமையை மனதார அனுபவிக்க முடிகிறது. இதுவே எனக்குப் போதும்.

கேள்வி: இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா (சின்னப்)
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே - நீ
தரும் மகிழ்ச்சி (ஆசை)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி

இந்தப் பாடலை, சின்னப் பிள்ளைகள், அவங்க பாட்டி சொல்லும் அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம்.

இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், இன்று காலம் கெட்டுக் கிடக்கிறது. உலகையே எளிதில் தொடர்புகொள்ள உங்கள் உள்ளங்கைகளுக்குள்ளேயே கருவிகள் உள்ளன. இந்த நேரத்தில் உங்கள் மொத்த நேரத்தையும் இதிலேயே மூழ்கடித்து விடாமல், உங்களைப் பெற்ற தாய் - தந்தையரை நினைத்துப் பாருங்கள். உங்களை அவர்கள் பெற்று, வளர்த்து, ஆளாக்குவதற்காக அவர்கள் எத்தனை அவதிகளை அனுபவித்திருப்பார்கள் என்று சிந்தியுங்கள். யார் இதை மனதார சிந்திக்கின்றார்களோ அவர்கள் தம் வாழ்வின் ஒரு வினாடியைக் கூட வீணாக்க விரும்ப மாட்டார்கள். நன்கு படித்து முன்னேற வாழ்த்தி, அவர்களுக்காகவும் சில வரிகளைப் பாடுகின்றேன்...

பொட்டும் வைத்து... பூவும் வைத்து...
பொன்னு ஒன்னு போனா...
இள வட்டமெல்லாம் கெட்டு மனம்
சுற்றி வரும் தானா...
இளசுகள தடுத்தா அது கேக்காது... அடடடட
பழசுகள திரும்பி அது பாக்காது... அடடடட
சேட்டையெல்லாம் செய்யிறது சின்னச் சின்ன பருவம்...
ஆசியெல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்...
காலமிருக்குது வாய்யா... இந்த மண்ணோட மன்னர்களே...

இப்படி, காதல் - கத்திரிக்காய் என வாழ்க்கையை வீணாக்கி விடாமல், கண்ணியத்தோடு வாழ்ந்து, முன்னேற உங்களை வாழ்த்துகிறேன், நன்றி என்றார் ரமணியம்மாள்.

English summary
Zee tv fame singer Ramani Ammal is very happy about her fame throguht the TV prorgamme Sarigama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X