For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ் அப் – அறிந்ததும்.. அறியாததும்!

Google Oneindia Tamil News

கைப்பேசி யுகமாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் கணிணிக்கு நிகரான திறன்பேசி எனப்படும் ஸ்மார்ட்ஃபோன்களின் மூலம் பல வகையான செயலிகளை நாம் பயன்படுத்த முடியும். அதில் மிக முக்கியமான செயலியான வாட்ஸ் ஆப்பைப் பற்றி நாம் அறிந்ததையும் அறியாததையும் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

வாட்ஸ் ஆப் - இது தமிழில் புலனம், பகிரி, கட்செவி அஞ்சல் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

இச்செயலி இணையத்தின் உதவியுடன் தகவல்கள், நிழற்படங்கள், உரை செய்திகள், பயனர் இருப்பிடம், ஒலி கோப்புகள் போன்றவற்றை வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் மற்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இத்துடன் வீடியோ அழைப்பு என்னும் கூடுதல் அம்சமும் இச்செயலியில் இடம் பெற்றுள்ளது. பயனர்களின் கைப்பேசி இணையத்தின் உதவியோடு மேசைக்கணிணியிலும், மடிக்கணிணியிலும் இச்செயலியை பயன்படுத்த இயலும்.

வாட்ஸ் ஆப்பின் வரலாறு:

யாஹூ நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களான பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யாஹூ நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தனர் ஆனால் இவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

The comprehensive story of Whats app

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாங்கிய ஐஃபோன் இவர்களை ஒரு புதிய செய்தி பகிரி செயலியை உருவாக்க உந்துதலாக அமைந்தது. இச்செயலியில் தனி நபர் பெயர் அருகில் ஸ்டேட்டஸ் தென்படும் வகையில் உருவாக்க எண்ணினர். எனவே, மேற்கு சேன் ஜோஸ் பகுதியில் வசிக்கும் கோமின் நண்பரான அலெக்ஸ் ஃபிஷ்மேன் என்பவரை சந்தித்து செயலி உருவாக்குவது குறித்து கலந்தாலோசிக்கத் துவங்கினர். ஃபிஷ்மேன் ரென்ட் அ கோடர் டாட் காம் என்னும் இணைய தளத்தில் ஒரு ரஷ்ய ஐஃபோன் உருவாக்குபவரான இகோர் சாலமனிகாவ் என்பவரை கண்டறிந்து கோமிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வாட்ஸ் ஆப் பெயர்க் காரணம்:

'வாட்ஸ் ஆப்' என்னும் சொற்றொடருக்கு "என்ன விஷயம்" என்று பொருள். இதனை உரையாடலுக்கு துவக்கமாக அமைத்துக் கொள்ளும் வகையில் 'வாட்ஸ் ஆப்' என்று பெயரிடப்பட்டது. கோம் இச்செயலியை உருவாக்கத் துவங்கிய போது பல தொழில் நுட்ப கோளாறுகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே செயலியை உருவாக்கும் முயற்சியை கைவிட்டு வேறு பணிக்குச் செல்ல எண்ணினார். ஆனால் ஆக்டன் அவரை ஊக்கப்படுத்தி பொறுமையுடன் இன்னும் சில காலம் காத்திருக்கும்படி அறிவுறுத்தினார். இவர்கள் இருவரின் அயராத முயற்சியால் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி 'வாட்ஸ் ஆப்' செயலி உருவானது.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனம் தம் பயனர்கள் ஏதேனும் செயலியை பயன்படுத்தாவிடில் அதனை அறியும் பொருட்டு மிகுதி அறிவிப்புகளை (புஷ் நோடிஃபிகேஷன்ஸ்) நிறுவியது. இந்நிகழ்வானது கோம் வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ்களில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது மற்ற தொடர்பாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தத் துவக்க முயற்சியாக அமைந்தது.

வாட்ஸ் ஆப்பின் வளர்ச்சி:

வாட்ஸ் ஆப் 2.0 2009 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டபோது வாட்ஸ் ஆப்பின் பயனர்கள் எண்ணிக்கை 2,50,000ஆக உயர்ந்தது. ஆக்டன் வேறொரு துவக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த போதிலும் 2009 ஆண்டு டிசம்பர் மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் இணைய முடிவு செய்தார்.

ஆக்டன் தன்னுடன் யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்த ஐந்து நண்பர்களிடம் ஆரம்ப நிதியுதவியாக 2,50,000 டாலர்களை வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி ஊக்குவித்து அதன் மூலம் வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனரானார். 2009 ஆம் ஆண்டு நவம்பர்1ஆம் தேதி வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.

பயனர்களுக்கு சரிபார்ப்பு செய்திகளை அனுப்ப தேவையான முதன்மைச் செலவுகளை ஈடுசெய்வதன் பொருட்டு இலவச செயலியாக இருந்த வாட்ஸ் ஆப்பை பயனர்களிடம் ஆண்டு சந்தா பெறும் செயலியாக மாற்றினர்.

டிசம்பர் மாதம் ஐஃபோன் பதிப்பில் சேர்க்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் துவக்கங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அமெரிக்க ஆப் ஸ்டோர்களில் மிக முக்கியமான 20 செயலிகளில் வாட்ஸ் ஆப் செயலியும் ஒன்றானது. 2013 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ் ஆப் 200 மில்லியன் பயனர்களும் 50 பணியாளர்களையும் பெற்றிருந்தது.

முகநூல் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை கையகப்படுத்தல்:

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி அன்று 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பெற்றுக் கொண்டது. வரலாற்றில் இத்துணிகர முயற்சி மிகப் பெரிய கைப்பற்றுதலாகக் கருதப்பட்டது. 19 பில்லியன் டாலர்களை ஃபேஸ்புக் நிறுவனம், 4 பில்லியன் டாலர்கள் பணமாகவும், 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஃபேஸ்புக் நிறுவன பங்குகளாகவும், 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு தடைசெய்யப்பட்ட பங்கு அலகுகளாகவும் கோம் மற்றும் ஆக்டனிடம் அளிக்கப்பட்டது.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியதன் விளைவாக அதிக அளவிலான வாட்ஸ் ஆப் பயனர்கள் வெவ்வேறு செயலிகளுக்கு புலம் பெயர்ந்தார்கள். மேலும் இதன் மூலம் 'டெலிகிராம்' செயலி 8 மில்லியன் பயனர்களைப் பெற்றது. இது போல் 'லைன்' செயலியும் 2 மில்லியன் பயனர்களைப் பெற்றது.

மார்க்கின் அறிவிப்பு:

வாட்ஸ் ஆப் பயனர்கள் அச்செயலியின் பலதரப்பட்ட சேவைகளை இலவசமாக பெறும் பொருட்டே இக்கையப்படுத்தல் நிகழ்ந்ததாக மார்க் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸில் அறிவித்தார்.

மார்க்கின் அறிவிப்பிற்கு 3 நாட்களுக்கு பிறகு கோம் வாட்ஸ் ஆப் செயலியில் குல் அழைப்புகளை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் மேலும் அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் வாட்ஸ் ஆப் செயலியை செயல்பட வைப்பதே தங்களின் குறிக்கோள் என்றும் அறிவித்தார்.

பயனர் ஒரு செய்தியை அனுப்பும் பொழுது அது முதலில் வாட்ஸ் ஆப் சேவையகத்திற்கு பயணப்பட்டு அங்கு சேமிக்கப்படுகிறது. பின் சேவையகம் செய்தியை பெறுநர் ஒப்புக்கொள்ளுமாறு தொடர்ந்து கூறும். செய்தி ஒப்புக்கொள்ளப்பட்டபின் சேவையகம் செய்தியை உதிர்க்கும். பின் அச்செய்தியானது சேவையகத்தின் தரவுத்தளத்தில் இருப்பதில்லை. செய்தியானது பெறுநருக்கு வழங்கப்படாமல் போனால், தரவுத்தளம் அச்செய்தியை 30 நாட்கள் அதனிடம் வைத்திருக்கும். பெறுநர் வாட்ஸ் ஆப் செயலியை 30 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் தரவுத்தளம் 30 நாட்களுக்குப் பிறகு அதனை நீக்கிவிடும்.

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் ஐரோப்பா நாடுகளின் முதன்மை மின்னனு தொடர்பாக திகழ்கிறது வாட்ஸ் ஆப் செயலி. இச்செயலி கைப்பேசி செயலிகளில் அதிக அளவில் தரவிறக்கப்பட்ட செயலிகளிலுள் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி வாட்ஸ் ஆப் 2 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைப் பெற்று உலகின் மிக பிரபலமான செய்தி செயலியாகத் திகழ்கின்றது.

- வருணி

English summary
The comprehensive story of Whats app, written by our reader Varunee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X