டிச. 20 முதல் சபரிமலைக்கு 5000 பக்தர்களை அனுமதிக்க கேரளா ஹைகோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: டிசம்பர் 20-ஆம் தேதி முதல் சபரிமலைக்கு 5000 பக்தர்களை அனுமதிக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா லாக்வுடனுக்கு பிறகு சபரிமலைக்கு வார நாட்களில் தினமும் 1000 பக்தர்களும் வார இறுதி நாட்களில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கோயிலுக்கு வருமானத்தை கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவஸ்தானம் இந்த எண்ணிக்கையை 2000-த்திலிருந்து 3000 ஆக உயர்த்தியது.

இந்த நிலையில் பக்தர்களை மேலும் அதிகரிக்க கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை கோயிலின் ஊழியர்கள், கோயிலில் பணியமர்த்தப்பட்ட போலீஸார் என 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது.
இந்த பக்தர்கள் சீசன் மகரவிளக்கிற்கு பிறகு முடிவடையும். எனவே வருவாயை கருத்தில் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த அனுமதிக்க தேவஸ்தானம் பரிந்துரை செய்தது.
இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்தன. கோயில் நம்பூதிரிகளுக்கு கொரோனா உறுதியானால் அது வழக்கமான பணிகளை பாதிக்கும் என்றனர். இந்த நிலையில் டிசம்பர் 20-ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தினமும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நிலக்கல் வருவதற்கு 48 மணி நேரத்திற்கு பிசிஆர் சோதனை மூலம் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வரும் டிசம்பர் 30 முதல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.