பரபரப்பு.. "டஞ்சன்' ரூமில் அடைத்து வைத்த மகன்.. பசியால் துடிதுடித்தே இறந்த அப்பா.. அம்மா உயிர் ஊசல்
திருவனந்தபுரம்: பெற்ற அப்பா - அம்மாவுக்கு சோறு போடாமல், தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதையும் செய்துள்ளார் அவர்களது மகன்.. இதன்விளைவு, அந்த அப்பா பட்டினியால் துடிதடித்து இறந்தே போய்விட்டார்.. ஆபத்தான நிலையில் அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. இந்த சம்பவத்தினால் கேரளாவே வெவெலத்து போய் உள்ளது!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே முண்டக்கயம் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் பொடியன்.. 80 வயதாகிறது.. இவரது மனைவி அம்மினி.. இவருக்கு 76 வயதாகிறது.
இந்த தம்பதியின் இளைய மகன் பெயர் ரெஜி... இவர் கூலி வேலை செய்கிறார். பெற்றோர் இருவரும் ரெஜி வீட்டில்தான் தங்கியிருந்தனர்.. ஆனால், ரெஜியோ மகா குடிகாரன்.. போதை பேர்வழி..!

சாப்பாடு
வயதான பெற்றோருக்கு சாப்பாடு தராமலேயே இருந்திருக்கிறார்... இதை வெளியில் சொல்லி விடுவார்கள் என்று வீட்டிலேயே ஒரு ரூமில் அடைத்து வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் உட்பட வேறு யாருமே அந்த ரூமுக்குள் சென்றுவிடக்கூடாது என்று, ரூமுக்கு முன்னாடியே ஒரு நாயையும் கட்டி வைத்திருந்தார்... அந்த நாய் எப்போது பார்த்தாலும் குரைத்து கொண்டே இருக்குமாம்.. அதற்கேற்றவாறு யாருமே ரெஜி வீட்டிற்குள் நுழையாமல் இருந்துள்ளனர்.

ரெஜி
இந்த நிலையில் நேற்று முன்தினம், சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் கணக்கெடுப்பு நடத்த வந்தனர்.. அப்போது ரெஜியின் வீட்டிலும் கணக்கெடுப்பு நடத்தினர்.. அப்போதுதான், வீட்டிற்குள் வயதான பெற்றோர் ரூமில் மிக கொடூரமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... ஆனால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

சுகாதார ஊழியர்கள்
அதைத் தொடர்ந்து சுகாதார ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்... அந்த ரூமையும் திறந்து பார்த்தனர்... அப்போது வயதான 2 பேரும் உடல் மெலிந்து பரிதாப நிலையில் கிடந்தனர்... அந்த ரூம் முழுக்க வெளிச்சமே இல்லாமல் இருண்டு கிடந்தது.. பாழடைந்து போய் சுவரெல்லாம் பெயர்ந்து கொண்டு இருந்தது.. அந்த அம்மா ஒரு அழுக்கு நைட்டியுடன், தலையெல்லாம் சீவாமல் அழுக்கு படிந்து காணப்பட்டார்.. அப்பாவோ அதற்கு மேல் எலும்புக்கூடாய் சுருண்டு இடுப்பில் துண்டுடன், உடலில் வேறு துணி இல்லாமல் படுத்து கிடந்தார்..

சுயநினைவு
அவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்... ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அப்பா பரிதாபமாக இறந்துவிட்டார்.. பல நாட்களாக உணவு சாப்பிடாததாலும், பசியால் அவர் ஏற்கனவே சுயநினைவு இழந்து மயங்கி கிடந்ததும், அதனாலேயே அவர் உயிர் பிரிந்துள்ளதும் தெரியவந்தது... அம்மாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்... அவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது.. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையெல்லாம் பார்த்து கேரளாவே ஆடிப்போய் உள்ளது.

பசியால் மரணம்
இப்படித்தான் நம்ம ஊரிலும், கடந்த வருடம் சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. பெற்ற மகன் சாப்பாடு போடாததால், பசியால் வயதான தம்பதி இருவரும் தற்கொலையே செய்து கொண்டனர்.. அதற்கு முன்பு போலீஸுக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தனர்.. "இறந்த பிறகு, நாங்கள் பெற்ற 3 மகன்களும் எங்களுக்கு கொள்ளி போடக்கூடாது, போலீசார்தான் எங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டும்" என்று எழுதி வைத்துவிட்டு இறந்தே போய்விட்டனர். பிள்ளைகள் வளர்ந்து சாப்பாடு போடுவார்கள் என்று பெற்றோர்கள் மலை போல நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம்.. பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் சரி, "சுயநலம்" தலைதூக்கிவிடுகிறது.. "பசி"யோ அனைத்தையும் வென்றுவிடுகிறது..!