வயிற்றில் ஒரு பருக்கை இல்லை.. மதுவை நினைவிருக்கா? 4 வருடமாகியும் கிடைக்காத நீதி.. கலங்கும் குடும்பம்
திருவனந்தபுரம்: அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டையே உலுக்கியது. இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலையில் 4 வருடம் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை... ஆதரவற்ற மதுவின் குடும்பம் இன்னும் அவரின் நினைவில் இருந்து நீங்க முடியாமல் துக்கத்தில் துடித்துக்கொண்டு இருக்கிறது.
சுற்றியும் மலைகள்.. தென்னை, பலாப்பழ மரங்கள்.. இப்படி இயற்கை கொஞ்சும் மலைகளுக்கு இடையே அமைந்து இருக்கும் சின்ன வீடுதான் மதுவின் வீடு. அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தில்தான் சோகங்களும்.. கண்ணீரும் நிறைந்த மதுவின் அந்த வீடு இருக்கிறது.
மல்லான் மற்றும் மல்லி தம்பதியின் மகன்தான் மது. மதுவிற்கு 2 வயது இருக்கும் போதே மல்லான் இறந்து போக அம்மா மல்லிதான் தனியாக குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 6ம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்ற மது.. பின்னர் அம்மா தனியாக கஷ்டப்படுவதை பார்த்து மனம் உடைந்து அம்மாவுடன் வயல் வேலைக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்.

மதுவின் குடும்பம்
இந்த நிலையில்தான் 17 வயது வரை வீட்டிலும், அருகில் வயலிலும் வேலைகளை செய்தவர்.. 17 வயதில் தனியாக வேலைக்கு செல்ல முடிவு செய்து. நண்பர்களின் உதவியுடன் ஆசாரி வேலைக்கு சென்று இருக்கிறார். ஆசாரி வேலைக்கு சென்றவர்.. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதை நிறுத்தி இருக்கிறார். வீட்டில் யாரிடமும் பேசாமல் தனியாக நாட்கள் கழித்துள்ளார். அதன்பின் காட்டிற்கு சென்று வசிக்க தொடங்கி உள்ளார்.

மது குகை வாசம்
காட்டிலேயே குகையில் வசித்து அங்கேயே தங்க தொடங்கி உள்ளார். 4-5 மாதம் ஆனாலும் குகையிலேயே வசிக்க தொடங்கி இருக்கிறார். அவ்வப்போது எங்காவது வயல் வேலைகளை செய்து., அதற்கு அரிசி வாங்கி வாங்கி வந்து வீட்டிற்கு கொடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். காட்டில் எடுக்கும் தேனை வீட்டில் வந்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில்தான் ஒருநாள் முக்காலி பகுதியில் இவர் கையில் அரிசி பையுடன் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளானார்.

அரிசி திருட்டு புகார்
அருகில் இருந்த ஊர்களில் அரிசி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அரிசி கொடுப்பதற்காக அவர் சென்ற போது, அவரை திருடன் என்று நினைத்து.. பலசரக்குக் கடையிலிருந்து அரிசியைத் திருடினார் என்று குற்றம்சாட்டப்பட்டு அந்தப் பகுதி மக்களால் அடித்துக் கொன்று உள்ளனர். அந்த பகுதியில் ஏற்கனவே அரிசி திருட்டு சம்பவங்கள் நடந்ததால், இவர்தான் அரிசியை திருடினார் என்று நினைத்து.. கள்ளன் கள்ளன் என்று கூறி அவரை அடித்து கொன்றுள்ளனர்.

சாப்பிடவே இல்லை
பின்னர் போஸ்ட்மார்ட்டத்தில்தான் மதுவின் வயிற்றில் ஒரே ஒரு பருக்கை சோறு கூட இல்லை. அவர் சப்பிட்டே 10 நாட்கள் இருக்கும். அவர் மிகவும் பலவீனமாக இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில்தான் அவர் பக்கத்து ஊரில் அரிசி வாங்கிவிட்டு வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என்பதை மதுவின் குடும்பத்தினர் புஹாரி ஜங்சன் யூ டியூப் பக்கத்தில் புஹாரி ராஜா என்பரிடம் பேட்டியாக அளித்துள்ளனர்.

அடித்து கொன்றனர்
மதுவின் தாயார் மல்லி பேசுகையில், அவனை அடித்து போட்டுவிட்டுதான் எங்களுக்கு போன் செய்தார்கள்.. திருடன் மதுவை பிடித்துவிட்டோம் என்று கூறி எங்களுக்கு போன் செய்தனர். மது கட்டுக்குள் இருந்தாலே இருந்திருப்பான்.. அவனை அடித்து கொன்றுவிட்டனர். அவனுக்கு நடந்தது யாருக்கும் நடந்திருக்க கூடாது. அவனை அடித்த வீடியோவை பார்த்தேன்.

முக்கி கொன்றனர்
அவன் தலையில் அரிசி மூட்டையை வைத்து இழுத்துட்டு போய் அடித்து உள்ளனர். குகைக்குள் அடித்து போட்டு.. அவனை இழுத்து வந்துள்ளனர். அப்போதெல்லாம் உயிர் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு உயிர் இருந்திருக்கிறது. அதன்பின் அவனை அருகில் இருக்கும் ஆற்றில் போட்டு முக்கி முக்கி 10 நிமிடம் தண்ணீரில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அப்போதுதான் அவன் பலியானான். அவர் இறந்த உடலைத்தான் நாங்கள் போலீஸ் நிலையத்தில் பார்த்தோம்.

புஹாரி ஜங்சன்
உடலை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லவில்லை. நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில்தான் உடலை பார்த்தோம். அவனுக்கு நெஞ்சு எலும்பு எல்லாம் உடைந்து காணப்பட்டது. இறந்து போவதற்கு 3-4 மாசத்திற்கு முன்தான் அவன் வீட்டிற்கு வந்தான். அதன்பின் அவன் வீட்டிற்கு வரவில்லை. கடைசியாக அவனை பிணமாகத்தான் பார்த்தோம் என்று மதுவின் தாயார் புஹாரி ஜங்சன் யூ டியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மன ரீதியாக பாதிப்பு
அங்கன்வாடி ஆசிரியர் மதுவின் சகோதரி சரஸ்வதி பேசுகையில், சின்ன வயதில் இருந்து அம்மா மீது அவனுக்கு மிகவும் விருப்பம். அம்மாவுடன் இருக்கவே அவன் படிப்பை நிறுத்தினான். 17 வயதில் அவன் பாலக்காட்டிற்கு ஆசாரி பணிக்கு சென்றான். அதன்பின்தான் அவனின் குணம் மாறியது. அவன் எங்களிடம் பேசுவதை குறைத்துக்கொண்டான். அவனுக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது போல இருந்தது. காட்டில்தான் அவன் இருந்தார்.

பல வீடியோ இருக்கிறது
அவனுக்கு இப்படி ஆகும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.. அவனை கொடுமைப்படுத்திய நீங்கள் பார்க்காத பல வீடியோக்கள் உள்ளன.. இந்த வழக்கில் விசாரணையும் நடக்கவில்லை.. எங்களுக்கு அரசு மீதும் நம்பிக்கை இல்லை என்று மதுவின் சகோதரி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவையே இந்த மதுவின் மரணம் நொடித்து போட்டது. கேரளா போன்ற முன்னேறிய மாநிலத்தில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடப்பது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில்தான்.. மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் நான்கு வருடங்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று விஷயம் தெரியவந்துள்ளது.

வழக்கில் முன்னேற்றம் இல்லை
இந்த வழக்கில் இன்னும் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணையில் இதுவரை எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மதுவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதற்காக அவரின் குடும்பம் பலரை சந்தித்து பேசியும்.. வழக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக அரசு தரப்பு வழக்கறிஞரே ஆஜராகவில்லை. 3 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்த வழக்கறிஞர் சமீபத்தில்தான் வழக்கில் ராஜினாமா செய்தார். இப்போது மீதும் இதில் வேறு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சினிமா
இந்த வழக்கில் ஏற்கனவே அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர்.. அட்டப்பாடியில் தங்க வசதி இல்லை என்று கூறி ராஜினாமா செய்ய.. இவர் இரண்டாவது வழக்கறிஞர் ஆவார். தொடக்கத்தில் வழக்கு விசாரணை பெரிதாக நடப்பது போல தெரிந்தாலும்.. சில அரசியல் செல்வாக்கு கொண்டவர்களால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அப்படியே விசாரணை முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மதுவை பற்றி எடுக்கப்பட இருந்த சினிமாவிற்கும் கோர்ட் கேஸ் காரணமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.