மத வெறுப்பு கோஷமிட்ட சிறுவன்! கோபப்பட்ட நீதிமன்றம்.. உடனே சிறுவனின் அப்பாவை கைது செய்த கேரள போலீசார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நடத்திய பேரணியில் சிறுவனின் வெறுப்பு பேச்சு வீடியோ வைரலான நிலையில், இது குறித்து போலீசார் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த வாரம் ஆலப்புழாவில் பேரணி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சிறுவன் ஒருவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இளைஞர் ஒருவரின் தோளில் அமர்ந்தபடி அச்சிறுவன் இதர மதத்தினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது.

நீதிமன்றம்
இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியது. இதுதொடர்பாக நீதிமன்றமும் கூட "இவர்கள் வளர்ந்து வரும் தலைமுறையினர் மனதில் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்துகளை விதைக்கின்றனர். இந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது, இவன் மனதில் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்துக்களே நிரம்பி இருக்கும். இதற்கு எதையாவது செய்தாக வேண்டும்" என்று கருத்து தெரிவித்தது.

தடுப்பு காவல்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்சிறுவனின் குடும்பத்தினர் கொச்சியில் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே தீவிர தேடுதலுக்குப் பின்னர், இன்று அச்சிறுவனை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், அவனது தந்தையும் ஆலப்புழாவில் வைத்து போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர். இந்தச் சம்பவத்தில் 20 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த அறிக்கையைக் கேரள அரசு குழந்தைகள் நலக் குழுவிடம் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

மதத்திற்கு எதிரானது இல்லை
இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், "கடந்த காலங்களில் என்ஆர்சி மற்றும் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் சமயத்திலும் இதே கோஷங்களை எழுப்பி உள்ளோம். நாங்கள் எந்த மதத்தையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை,. சங்க பரிவாருக்கு எதிரான முழக்கம் என்பது ஒட்டுமொத்த இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கு எதிரான முழக்கம் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவன்
இந்த கோஷங்களை யார் கற்றுக் கொடுத்தனர் என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அச்சுறுவன, "நான் என்ஆர்சி பயிற்சி வகுப்பிற்குச் சென்றபோது, அதை அங்கேயே கேட்டுக் கற்றுக்கொண்டேன்" என்றான். இது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்குழந்தைக்கு கவுன்சிலிங் வழங்குமாறு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

கேரளா
கடந்த மே 21ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் இந்த பேரணியை நடத்த சில மணி நேரம் முன்பு, பஜ்ரங் தள் தொழிலாளர்கள் ஆலப்புழாவில் "சௌரியா பேரணியை" நடத்தினர். அதில் "தேச விரோதிகள் மற்றும் வகுப்பு வாதிகளிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது" என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கேரளாவில் பதற்றம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக ஆலப்புழா உள்ளது. கடந்த ஆண்டு பிஎஃப்ஐயின் அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பாஜக தலைவர் அடுத்தடுத்து வெறும் 12 மணி நேரத்திற்குள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.