நுபுர் சர்மா அவசரத்தில் ஏதோ பேசிட்டார்.. இதற்கெல்லாம் ஏன் ரியாக்சன்? கேட்பது கேரள ஆளுநர் ஆரிப் கான்
திருவனந்தபுரம்: கத்தார் நாட்டிடம் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை, நாம் சின்ன விஷயத்திற்கு எல்லாம் ரியாக்சன் கொடுக்க வேண்டியது இல்லை என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.
இவரின் பேச்சு சர்ச்சையான நிலையில் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டார்.
நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்ததற்கு.. பாஜக கூட்டணி ஆதரவாளர்களும் அமோக ஆதரவு.. சி-வோட்டர் பரபர சர்வே

கத்தார் விளக்கம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.. அதில் பாஜக தங்கள் நிர்வாகிகளை நீக்கியதை வரவேற்கிறோம். ஆனால் இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. ஆனால் இந்தியா இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, இந்த கருத்துக்கள் இந்தியாவின் அதிகாரபூர்வ கருத்துக்கள் அல்ல. அவை சில கலகக்காரர்களின் கருத்து என்று விளக்கம் அளித்தது.

ஆரிப் கான்
இந்த நிலையில் கத்தார் நாட்டிடம் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை என்று கேரள ஆளுநர் ஆரிப் கான் தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், இந்தியாவிற்கு எதிராக சில நாடுகள் பல காலமாக கருத்து தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் இவர்கள் இந்தியாவிற்கு எதிராக பேசி உள்ளனர். ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது.

அவர்கள் உரிமை
ஆனால் அதன் மீதெல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டுமா? என்பதே கேள்வி.அவர்கள் நம்மை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்.. ஆனால் அது எல்லாம் முக்கியம் இல்லை. இந்தியா இது போன்ற சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் ரியாக்சன் கொடுக்க வேண்டியது இல்லை. இந்தியா தனது சொந்த பாரம்பரியத்தை காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை நம்முடைய பாரம்பரியம் இல்லை.

மற்றவர்கள் கலாச்சாரம்
மற்றபடி மரியாதையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்வதும்தான் நம்முடைய பாரம்பரியம். மற்றவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் நம்முடைய கலாச்சாரம். நாம் யாரையும் வேற்று ஆளாக பார்க்க மாட்டோம். பிரதமர் மோடி எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வேண்டும். அதுதான் நம் பாரம்பரியம் என்று கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார். எல்லோரும் வளர வேண்டும்.

வலுப்படுத்த கூடாது
நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். அதைத்தான் நாம் வலுப்படுத்த வேண்டும். நுபுர் சர்மா அவசரத்தில் தொலைக்காட்சியில் ஏதாவது பேசி இருப்பார். விவாத கொதிப்பில் ஏதாவது சொல்லி இருப்பார். அது போன்ற விஷயங்கள் எல்லாம் பெரும்பாலும் முக்கியம் கிடையாது, என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.