மத வெறுப்பு கோஷமிட்ட சிறுவன் “வளர்ந்தா என்னாகும்?” கோபப்பட்ட நீதிமன்றம் - 2 பேர் மீது வழக்குப்பதிவு!
திருவனந்தபுரம் : கேரளாவில் சிறுவன் ஒருவன் மத வெறுப்பு கோஷமிட்ட நிலையில், அந்தப் பேரணியை நடத்திய அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த வாரம் ஆலப்புழாவில் நடைபெற்ற பேரணியில், சிறுவன் ஒருவன் இந்து, கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினான்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது பாப்பிலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இரண்டு நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
PFI, எஸ்டிபிஐ, பயங்கரவாத இயக்கங்களே.. ஆர்எஸ்எஸ் நிர்வாகி மனைவி வழக்கில் கேரள ஐகோர்ட் நீதிபதி கருத்து

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த வாரம் ஆலப்புழாவில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட சிறுவன் ஒருவன் ஒருவரின் தோளில் அமர்ந்தபடி இந்து, கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினான். இந்தப் பேரணியில் அந்தச் சிறுவன் கோஷம் எழுப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

நீதிமன்றம் அச்சம்
இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியது. இதுதொடர்பாக நீதிமன்றமும் "இவர்கள் வளர்ந்து வரும் தலைமுறையினர் மனதில் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்துகளை விதைக்கின்றனர். இந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது, இவன் மனதில் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்துக்களே நிரம்பி இருக்கும். இதற்கு எதையாவது செய்தாக வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது.

கண்டனம்
சிறுவன் கோஷமிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர், "இந்த நிகழ்வின் காணொளி கேரளாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெறுப்பு பேச்சு மற்றும் மிரட்டல் கோஷங்கள் எந்த அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் வருந்தத்தக்கது. வகுப்புவாதத்தை எதிர்ப்பது என்பது அனைத்து தரப்பினரின் வகுப்புவாதத்தையும் எதிர்ப்பதுதான்" எனத் தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க தலைவர் கேஜே அல்போன்ஸ் கூறுகையில், "கேரளாவில் கடந்த 10-15 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. கேரளா ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு மிகப்பெரிய ஆய்வகமாக மாறி வருகிறது. இங்கிருந்து சிரியா, ஈராக் நாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அழைத்து வந்தவர்
இதையடுத்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேரளா போலீசாரிடம் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு கோரியது. இதையடுத்து கேரளா போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். கைதானவர் கோட்டயத்தை அடுத்த எராட்டுபுட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர்தான் அந்தச் சிறுவனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பேரணிக்கு அழைத்து வந்தவர் எனக் கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு
மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஆலப்புழா மாவட்ட தலைவர் நவாஸ் வந்தனம் மற்றும் மாவட்ட செயலாளர் முஜீப் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
"சிறுவன் எழுப்பிய கோஷத்தை நாங்கள் எழுதித் தரவில்லை. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேரந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். சிறுவன் எழுப்பிய கோஷத்தை பார்த்த எங்கள் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்தான், சிறுவனை தடுத்து நிறுத்தினார்" என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.