‘அவருக்கு’ தொடர்பு உள்ளது! குண்டை தூக்கிப் போட்ட ’தங்க கடத்தல்’ ஸ்வப்னா சுரேஷ்! மறுக்கும் பினராயி..!
திருவனந்தபுரம் : இந்தியாவையே உலுக்கிய கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், அந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் பினராயி விஜயன் அதனை மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் தங்க கடத்தல் சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே புரட்டி போட்டது.
துபாய் சென்ற பினராயி! கட்டுக்கட்டாக பேக்கில் பணம்! 'தங்க கடத்தல்’ ஸ்வப்னா சுரேஷ் பரபர வாக்குமூலம்!

முதல்வர் பினராயி விஜயனின்
இச்சம்பவத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள ஆளும் கட்சிக்கு தொடர்புடைய இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

பகீர் புகார்
இந்நிலையில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை வாக்குமூலம் அளித்தார். அதில், தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, முதலமைச்சரின் செயலாளர் ரவீந்திரன், அப்போதைய தலைமைச் செயலாளர் நளினி நேட்டோ, அப்போதைய அமைச்சர் ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இருந்தார்.

பினராயி விஜயன் மறுப்பு
ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மக்கள் இதை ஏற்கனவே நிராகரித்துவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதே குற்றச்சாட்டை சிறிது காலத்திற்கு முன்பு ஸ்வப்னா சுரேஷ் கூறியதாகவும், சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீ்ண்டும் கூறி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், இதுபோன்ற பொய்களை கூறுவதன் மூலம் அரசு மற்றும் ஆட்சியாளர்களின் உறுதியை குலைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

உயிருக்கு ஆபத்து
பினராயி விஜயன் 2016ல் முதலமைச்சராக ஆனதில் இருந்தே இந்த குற்றச்சாட்டு இருந்து வருவதாகத் தெரிவித்துள்ள பினராயி விஜயனின் மருமகனும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சருமான முகம்மது ரியாஸ், இந்த குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றார். இதனிடையே, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

பின்னணியில் காங்கிரஸ்
ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டின் பின்னணியில் பாஜகவும், காங்கிரசும் இருப்பதாக கேரள முன்னாள் அமைச்சர் கே.டி. ஜலீல் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் மீதான மதிப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். பினராயி விஜயன் துபாய் சென்ற போது கட்டுக் கட்டாய் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பை கொண்டு செல்லப்பட்டது என ஸ்வப்னா பகீர் குற்றம் சுமத்திய நிலையில் பினராயி விஜயன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.