விடாத ஸ்வப்னா! நடுவானில்.. பினராயி விஜயனை நோக்கி வந்த 2 பேர்.. விமானத்தில் நடந்த பரபர சம்பவம்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நேற்று அவர் பயணித்த விமானத்திலேயே கருப்பு கொடி கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள தங்க கடத்தல் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகப் பெயரைப் பயன்படுத்தி நடந்து வந்த தங்க கடத்தல் கடந்த 2020ம் வருடம் அம்பலம் ஆனது .
இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் வேலை பார்த்த அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்க கடத்தல் புகார்: எதிர்க்கட்சிகளின் மிரட்டல்கள் வீண் முயற்சியே.. பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!

ஸ்வப்னா சுரேஷ்
இந்த விசாரணையின் போது 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று அந்த துணை தூதரகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அங்கு பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் பல அதிகாரிகள் தூதரகம் வழியாக, தூதரக பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ் நேரடியாக அம்மாநில முதல்வர் பினராயி மீது புகார்களை அடுக்கி வருகிறார்.

புகார்கள்
இந்த தங்க கடத்தலில் அவருக்கும் தொடர்பு உள்ளது. அமீரகம் செல்லும் போது பினராயி பணம் எடுத்து சென்றார். ஆளும் கட்சியினர் என்னை கொல்ல பார்க்கிறார்கள் என்று புகார் வைத்தார். என்னை தனிமைப்படுத்தும் வேலை தொடங்கிவிட்டது. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதுதான் பினராயி பிளான். அதன்பின் என்னை கொன்று விடுவார்கள். என்னை இப்படி கொடுமைப்படுத்துவதற்கு பதிலாக கொன்று விடுங்கள், என்று கூறினார்.

விசாரணை தீவிரம்
இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கடுமையான கோஷங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று அவருக்கு எதிராக மாநிலம் முழுக்க காங்கிரஸ் சார்பாக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது. பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் கான்வாய் செல்லும் வழியில் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது.

கருப்பு கொடி போராட்டம்
இந்த நிலையில்தான் நேற்று பினராயி விஜயன் விமானத்தில் செல்லும் போதும் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. நேற்று முதல்வர் பினராயி கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி விமானத்தில் சென்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் இரண்டு பேர் முதல்வருக்கு எதிராக விமானத்தில் கருப்பு கொடி காட்டினார்கள்.ஓ.. ஓ.. என்று கோஷம் எழுப்பி.. பினராயி பதவி விலக வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத பினராயி அதிர்ச்சி அடைந்தார்.

முதல்வர் பதற்றம்
ஆனால் அவரை சுற்றி பாதுகாவலர்கள் அரண் போல நின்றனர். முதல்வர் இந்த விமானத்தில் பயணம் செய்வது தெரிந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் அதில் டிக்கெட் எடுத்து உடன் பயணம் செய்துள்ளனர். சரியாக விமான தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன் அவர்கள் முதல்வரை நோக்கி சென்று, அவருக்கு அருகே நின்று கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்தனர். அங்கு போராட்டம் செய்த 2 காங்கிரஸ் நிர்வாகிகளை சிபிஎம் நிர்வாகி ஜெயராஜன் பிடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
|
வீடியோ வெளியானது
இதில் இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகளும் கீழே விழுந்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரை தாக்குவதற்காக இவர்கள் முயன்றதாக சிபிஎம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. ஸ்வப்னா விவகாரம் தொடர்ந்து அம்மாநில முதல்வருக்கு எதிராக திரும்பி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.