பினராயி "கனெக்சன்"! பேசிக்கொண்டு இருக்கும் போதே "கோல்டன்" ஸ்வப்னாவிற்கு நேர்ந்த சம்பவம்.. பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் அளித்து வரும் பேட்டிகள் அம்மாநில அரசியலை உலுக்கி உள்ளது.
Recommended Video - Watch Now
கேரள தங்க கடத்தல் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகப் பெயரைப் பயன்படுத்தி நடந்து வந்த தங்க கடத்தல் கடந்த 2020ம் வருடம் அம்பலம் ஆனது .
சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் படி இந்த தங்க கடத்தல் மொத்தமாக வெளியே வந்தது. இதற்கு பின் பலஅதிகாரிகள், கேரள முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்த அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்வாங்க மாட்டேன்.. என்னை கொன்றுவிடுங்கள்.. எல்லா உண்மைகளும் மூடப்படும்- ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர்

விசாரணை
இந்த விசாரணையின் போது 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று அந்த துணை தூதரகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி ஆகும்,. அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சரித் குமார் என்பவர் பெயருக்கு இந்த பார்சல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் இருந்து சரித் குமார் முன்பே பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது . இந்த பார்சலை வாங்க வந்த சரித் குமார் அங்கேயே சுங்கதுறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார்.

சுரேஷ்
இவரிடம் நடந்த விசாரணையில்தான் ஸ்வப்னா சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடுக்கப்பட்டது. அதே அலுவலகத்தில் வேலை பார்த்து, கிரிமினல் புகார் காரணமாக நீக்கப்பட்டவர்தான் ஸ்வப்னா சுரேஷ். இந்த நிலையில் பெரும் தேடுதல் வேட்டைக்கு பின் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் பல அதிகாரிகள் தூதரகம் வழியாக, தூதரக பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்வப்னா சுரேஷ்
கேரளா முதல்வர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் இவர் பணியாற்றி வந்தவர். அதோடு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா தெரிவித்தார். போலீசால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற ஸ்வப்னா 18 மாதங்களுக்கு பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது நேரடியாக அம்மாநில முதல்வர் மீது ஸ்வப்னா புகார்களை அடுக்கி வருகிறார்.

புகார் என்ன
இந்த தங்க கடத்தலில் அவருக்கும் தொடர்பு உள்ளது. அமீரகம் செல்லும் போது பினராயி பணம் எடுத்து சென்றார். ஆளும் கட்சியினர் என்னை கொல்ல பார்க்கிறார்கள் என்று புகார் வைத்தார். இப்பொது இவரின் வழக்கறிஞர் கிருஷ்ணா ராஜ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்வப்னா, என்னை தனிமைப்படுத்தும் வேலை தொடங்கிவிட்டது. என் உயிருக்கு ஆபத்து உள்ளது.

பினராயி மீது புகார்
சரித் நாயர் கதையை அரசு தீர்த்துக்கட்டிவிடும். அதுதான் பினராயி பிளான். அதன்பின் என்னை கொன்று விடுவார்கள். என்னை இப்படி கொடுமைப்படுத்துவதற்கு பதிலாக கொன்று விடுங்கள். நான் என் வாக்குமூலத்தை மாற்றமாட்டேன். என்னை சுற்றி இருப்பவர்களை தொல்லை செய்யாதீர்கள். என்னால் முடியவில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது, என்று கூறி இன்று ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

மயங்கி விழுந்தார்
இன்று பேசிக்கொண்டு இருக்கும் போதே ஸ்வப்னா சுரேஷ் மயங்கி விழுந்தார். கண்ணீர்விட்டபடி பேசிக்கொண்டு இருந்தவர் அப்படியே மயங்கி விழுந்தார். சுற்றி நின்றவர்கள் அவரை கைத்தாங்களாக பிடித்து அழைத்து சென்றனர். ஸ்வப்னா சுரேஷ் புகாரால் அம்மாநில அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது . பினராயி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.