PFI, எஸ்டிபிஐ, பயங்கரவாத இயக்கங்களே.. ஆர்எஸ்எஸ் நிர்வாகி மனைவி வழக்கில் கேரள ஐகோர்ட் நீதிபதி கருத்து
திருவனந்தபுரம்: எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ ஆகியவை பயங்கரவாத இயக்கங்கள் என்பதில் சந்தேகமில்லை என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபால் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் SDPI கட்சியை சேர்ந்த ஜுபைர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.
இதனால் நிலைத்தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தவரை காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் அவரது தந்தையின் கண்முன்பே சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் கார்
இந்த கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சஞ்சித் என்பது தெரியவந்தது. சஞ்சித் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலக்காட்டில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர் மீது காரை விட்டு மோதி கொன்றனர்.

சஞ்சித் மனைவி வழக்கு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சஞ்சித்தின் மனைவி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் பயங்கரவாத கொள்கைகளை பரப்பி வந்ததன, இதனை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான சஞ்சித் தொடர்ந்து எதிர்த்து வந்தார்.

மதமாற்றம்
சஞ்சித் மக்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்த முயன்றார். ஆர்.எஸ்.எஸ்., பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ. இடையிலான கருத்தியல் முரண்பாடுகளை வைத்து சஞ்சித் எதிர்ப்பை பதிவு செய்து வந்தார். பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ.க்கு இந்தியாவுக்கு வெளியிலும் கிளைகள் உள்ளன. அவர்கள் பிற மத மக்களை இஸ்லாமிய மதத்துக்கு மிரட்டியும், வற்புறுத்தியும் மாற்றி வருகிறார்கள்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி கருத்து
சஞ்சித் மனைவியின் வழக்கை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஹரிபால், பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ. குறித்து அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டார். "பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை இன்னும் தடை செய்யப்படாத அமைப்புகள்." என நீதிபதி கூறினார். நீதிபதியின் இந்த கருத்தை பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.