மன தைரியம் இருந்தால் கொரோனாவை வெல்லலாம்.. விரைவில் பணிக்கு செல்வேன்.. நோயிலிருந்து மீண்ட கேரள நர்ஸ்
திருவனந்தபுரம்: விரைவில் மீண்டும் பணிக்குத் திரும்புவேன் என கொரோனாவிலிருந்து மீண்ட கேரளா நர்ஸ் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3072 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் கேரளா 3ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இத்தாலியில் இருந்து கொரோனாவுடன் வந்த மகன், மருமகள், பேரன் ஆகியோரால் 93 வயதான தாமஸ், 88 வயதான அவரது மனைவி மரியம்மே ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பிரார்த்தனை
இதையடுத்து அவர்கள் 5 பேரும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மகன், மருமகள், பேரன் ஆகிய மூவரும் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். அவர்கள் மூவரும் இவர்கள் இருவரது உடல்நிலை தேறி வர வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

கொரோனா உறுதி
வயதானவர்களுக்கு கொரோனா வந்தால் மரணம்தான் என கூறப்பட்ட நிலையில் 93 வயது முதியவர் தாமஸும் அவரது மனைவியும் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனிடையே இவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் ரேஷ்மா மோகன்தாஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

வீடு திரும்பிய நர்ஸ்
இதையடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இவரும் கொரோனாவிலிருந்து மீண்டார். இதையடுத்து நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். எனினும் திரிபுனிதுராவில் உள்ள அவரது வீட்டில் அவர் இன்னும் இரு வாரங்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு திரும்பிய நர்ஸை ஆங்கில செய்தி தளம் பேட்டி எடுத்துள்ளது.

காய்ச்சல்
அதில் அவர் கூறுகையில் தனிமைப்படுத்தப்பட்ட ஐசியூவில் 10 நாட்கள் பணியாற்றிய பிறகுதான் முதல் அறிகுறிகள் இருப்பதை உணர்ந்தேன். சளி மட்டுமே இருந்தது. இதையடுத்து எனது தலைமை செவிலியரிடம் தெரிவித்தேன். அவர் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் நான் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்தேன். காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வர சொன்னார்கள்.

விரைவில் பணிக்கு செல்வேன்
அதன்படி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனக்கு பாசிட்டிவ் என வந்தது. எனினும் நான் எந்தவித அச்சமும் கொள்ளவில்லை. உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயிலிருந்து மீண்டு விடலாம். விரைவில் வேலைக்கு செல்வேன் என ரேஷ்மா தெரிவித்துள்ளார்.