விஸ்மயா தற்கொலை வழக்கு: 100 சவரன் வரதட்சிணை கொடுத்தும் பேராசை.. கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரம்:கேரளாவில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்தவர் 22 வயது விஸ்மயா வி நாயர். இவர் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். இவருக்கும் அரசு ஊழியரான கிரண்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை, கிரண்குமாருக்கு வரதட்சிணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், சொகுசு கார், ரூ 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
இரவெல்லாம் அழுத விஸ்மயா.. ஆணியாலேயே குத்தி.. நாட்டையே உலுக்கிய மரணம்! கணவர் குற்றவாளி! கோர்ட் அதிரடி

வரதட்சிணை
இத்தனையையும் பெற்றுக் கொண்டும் திருப்தி அடையாத பேராசைக்காரர் கிரண்குமார், கூடுதலாக வரதட்சிணை கேட்டு விஸ்மயாவை சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் விஸ்மயா கூறிய நிலையில் அவரது தந்தை, கிரண்குமாரிடம் இதற்கு மேல் என்னால் வரதட்சிணை கொடுக்க முடியாது என கூறிவிட்டார்.

விஸ்மயா
இதனால் ஆத்திரம் அடைந்த கிரண்குமார், விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். தினந்தோறும் அடி, உதையால் வாழ்க்கையே வெறுத்த விஸ்மயா இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என கருதி கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு முதல் நாள் இரவு கிரண்குமார் அடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் ஆப்பில் உறவினருக்கு பதிவிட்டிருந்தார்.

குற்றவாளி என தீர்ப்பு
இதையடுத்து கிரண்குமார் கைது செய்யப்பட்டார். அவர் அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொல்லம் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் விஸ்மயா மரணத்தில் கிரண்குமார்தான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கிரண்குமாருக்கு என்ன தண்டனை
இந்த நிலையில் கிரண்குமாருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தீர்ப்பளித்துள்ளார். மேலும் ரூ 12.50 லட்சம் அபராதமும் கிரண்குமாருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தில் ரூ 2 லட்சத்தை விஸ்மயாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.