கேரளாவில் அதிகனமழை அலர்ட்...6 மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், பததனம்திட்ட, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மலை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை இந்தியாவில் தொடங்க உள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழையை எடவபதி என்று அழைக்கின்றனர். இந்த ஆண்டு பருவமழை மே 27ஆம் தேதிக்குள் தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, கேரள தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் ஆலோசனை நடத்தினார்.தேவைப்பட்டால் நிவாரண முகாம்களைத் திறக்க உத்தரவுகளை வழங்கினார்.
மேலும் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அலாரம் அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அவசர நிலைகளை சமாளிக்க ஏற்கனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்கு மாற்றுமாறு ஆட்சியர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மீனவர்கள் மே 16ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வாளர் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளார். மலைப்பாங்கான மாவட்டத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு, மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,
கடலோரப் பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு போலீஸ் டி.ஜி.பி. காந்த் கேட்டுக் கொண்டுள்ளார். கடலோர காவல் நிலையங்கள் பாதுகாப்பு படகுகள் மற்றும் பிற வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு அதிகமாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்வதை குறிக்கும் முன்னறிவிப்பு ஆகும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்வதை குறிக்கும். 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கேரளா கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.