சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை கோலாகலம் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்
சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி அளித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது சாமியே சரணம் ஐயப்பா என்று பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலித்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா தை முதல்நாள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் திருவாபரணம்: மகரவிளக்கு பூஜை நாளில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பன்
சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பந்தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மகர விளக்கு பூஜை
இந்த ஆண்டு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இன்று மாலை இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி இன்று மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கடந்த 12ஆம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட திருவாபரணங்கள் சரங்குத்திக்கு வந்து பதினெட்டாம் படி வழியாக இன்று மாலை சரங்குத்திக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டு தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மகாதீபாராதனை
வானத்தில் மகர நட்சத்திரம் உதிக்கும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட அந்த ஆபரணங்களை திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து மகாதீபாராதனை நடைபெறும். அதை காணும் ஏற்படும் அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. அப்பொழுது சாமியே சரணம் ஐயப்பா என பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் சன்னிதானம் மட்டுமல்ல சபரிமலை எங்கும் எதிரொலிக்கும்.

மகர ஜோதி தரிசனம்
அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பன் ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தரிசித்த பக்தர்களுக்கு மெய் சிலிர்க்க சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷமிட்டனர். மகர ஜோதியை தரிசிக்க சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே கூடியிருந்த பக்தர்கள் ஜோதி ரூபமாக ஒளிர்ந்த ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தரிசனம்
மகர ஜோதியைக் காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது, நாள் ஒன்றிற்கு 65 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப்பட்டது. பேட்டைத்துள்ளல், திருவாபரண ஊர்வலத்திலும் 50 பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

20ஆம் தேதி வரை பூஜை
ஐயப்பனுக்கு வரும் 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம் தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.