மண்டல, மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்தது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு
சபரிமலை: சாமியே சரணம் ஐயப்பா என 60 நாட்கள் சபரிமலையில் எதிரொலித்த சரண கோஷம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு கால பூஜை முடிந்த பின்னர் இன்று நடை அடைக்கப்பட்டது. கும்ப மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. தினசரியும் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும்... விழுப்புரத்தில் லாரி மோதியதால் பெரியார் சிலை சேதம்- சாலை மறியலால் பதற்றம்!

மகர ஜோதி தரிசனம்
ஜனவரி 14ஆம் தேதி மகர மாதம் பிறந்ததை அடுத்து மகர விளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாட்டு தடை உத்தரவுகளை பின்பற்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வரை திருவாபரண அலங்காரத்துடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

மாளிகப்புரத்தம்மன் ஊர்வலம்
செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் நெய்யபிஷேம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புதன்கிழமை இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். காட்டுப்பாதையும் இரவு அடைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். செவ்வாய்கிழமையன்று சபரிமலை சீசன் நிறைவாக பாரம்பரிய முறைப்படி சன்னிதானத்தில் இருந்து சரம் குத்திக்கு மாளிகப்புரத்தம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கோவில் நடை அடைப்பு
இன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் பந்தளம் ராஜ குடும்ப வாரிசு சங்கர் வர்மா தலைமையில் மீண்டும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

பிப்ரவரி 12ல் நடை திறப்பு
நடப்பாண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இதுவரை 147 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என்றும்,அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடைபெறும் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.