சபரிமலை: 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை - தேவஸ்தானம் அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவ்வப்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

தற்போது குழந்தைகள் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கட்டமாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஆன்லைன் முன்பதிவிற்கு ஆதார் நகல், பாஸ்போர்ட் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரி அடையாள அட்டை நகலை வைத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குழந்தைகள் உள்பட அனைவரும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும். 10 முதல் 18 வயதிற்குட்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் தரிசனத்திற்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் தரிசனத்திற்கான உடனடி முன் பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது.
நிலக்கல்லில் மட்டும் இதற்காக 4 மையங்களில் முன் பதிவு நடைபெற்று வருகிறது. தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு மூலம் தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
கடந்த மாதம் 30ஆம்தேதி வரை 2,600 பக்தர்கள் உடனடி முன் பதிவு மூலம் தரிசனம் செய்து உள்ளனர். ஆன்லைன் முன் பதிவு மற்றும் உடனடி முன் பதிவு சேவைகள் கேரள காவல் துறை மூலம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பணம் செலுத்தி முன் பதிவு செய்ய தேவை இல்லை.
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் இலவசமாக முன் பதிவு செய்யும் பக்தர்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் சேர்த்து முன் பதிவு செய்ய வசதி உள்ளது. அதற்கான முன் பதிவின் போது தரப்படும் ஆன் லைன் ரசீது நகலை காண்பித்து தரிசனத்திற்கு வரும் போது, பக்தர்கள் சன்னிதானத்தில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் கொடுத்து முன் பதிவு செய்த பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம். இதனால் சன்னிதானத்தில் பிரசாதத்திற்காக பணம் செலுத்த காத்து நிற்கவேண்டிய நிலை தவிர்க்கப்படும்.