• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Exclusive: காதலிப்பது தவறில்லை.. யாரை காதலிக்கிறோம் என்பது முக்கியம்.. வலிகளை பகிரும் ஆனி சிவா SI..!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கல்லூரிக்காலத்தில் காதலிப்பது தவறில்லை என்றும் ஆனால் யாரை காதலிக்கிறோம் என்பதில் கவனம் தேவை எனவும் கூறுகிறார் காதல் கணவரால் கைவிடப்பட்டு இன்று காவல் உதவி ஆய்வாளராக உயர்ந்துள்ள ஆனி சிவா.

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கல்லூரிக்காலத்தில் காதலனை கரம்பிடித்த ஆனி விஜயாவை, 8 மாத கைகுழந்தையோடு வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் அந்த கொடூர கணவர்.

Special interview with Varkala Sub inspector annie shiva

இந்நிலையில் எந்த ஊரில் தனது கணவரால் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டாரோ அதே ஊருக்கு எஸ்.ஐ.யாக பணியமர்த்தப்பட்டு, இப்போது அவரது சொந்த விருப்பத்தின் பேரில் கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேள்வி: காதல் வாழ்க்கை கசப்பாக மாறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

பதில்: காதல் செய்வதே தவறு என்று நான் கூறமாட்டேன். ஆனால் யாரை காதலிக்கிறோம் என்பதும் அந்த நபருடைய குணம் என்ன என்பதை அறிவதும் மிகவும் முக்கியம். எனது காதல் வாழ்க்கை பற்றி இப்போது பேச விரும்பவில்லை. அதில் பல பிரச்சனைகள் உள்ளடங்கியிருக்கின்றன. இன்று வரை எனது அப்பா என்னிடம் பேசமாட்டார். அம்மா மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக பேசிக்கொள்கிறார். கணவரால் கைவிடப்பட்ட போது, 8 மாத கைகுழந்தையோடு வீடு தேடி அலைந்திருக்கிறேன். சிங்கிள் மதர் என்பதாலும் உறவினர்கள் ஆதரவு இல்லை என்பதாலும் எனக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக் கூட பலரும் யோசித்தார்கள். இதனால் கைக்குழந்தையாக இருந்த எனது மகனை வைத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் கூட உறங்கியிருக்கிறேன்.

கேள்வி: பல்வேறு போராட்டங்களை கடந்து இப்போது காவல் உதவி ஆய்வாளராக பணி கிடைத்துள்ளது, இதை எப்படி உணர்கிறீர்கள்..?

பதில்: பெருமையாக கருதுகிறேன். 2008-ம் ஆண்டு இதே வர்கலாவில் தான் கணவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார். 2012-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து அளித்தார். எப்போது கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேனோ அப்போது முதல் நான் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். ஐஸ்கிரீம் விற்பது, எலுமிச்சை ஜூஸ் விற்பது, எல்.ஐ.சி. முகவர் என தற்காலிகமாக பல பணிகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போது தான் 2014-ம் ஆண்டு பெண் காவல் உதவி ஆய்வாளர் நேரடி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதை என்னிடம் காட்டிய உறவினர் ஒருவர், அந்த தேர்வை எழுதுமாறு ஊக்கமளித்தார். அதன்படி நானும் அந்த தேர்வை எழுதினேன். தேர்வு முடிவில் வெற்றியும் பெற்றேன். ஆனால் எஸ்.ஐ.யாக பணி ஆணை பெற சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இதனிடையே சிறிது காலம் காவலராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

கேள்வி: எந்த ஊரில் உங்களை உங்கள் கணவர் நடுத்தெருவில் நிறுத்தினாரோ, அதே ஊருக்கு 14 ஆண்டுகள் கழித்து எஸ்.ஐ.யாக வந்திருக்கிறீர்கள்.. அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற தகவலை அறிந்தீர்களா..?

பதில்: இல்லை, நான் ஏன் அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அவருக்கென்று ஒரு குடும்பம் உள்ளது, அவர் வாழ்ந்து வருகிறார். எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது, நான் எனது மகனுடன் வாழ்ந்து வருகிறேன்.

கேள்வி: காவல் உதவி ஆய்வாளராக பணி நியமனம் செய்யப்பட்ட பிறகு உங்கள் தந்தையை சந்திக்க முயற்சித்தீர்களா..?

பதில்: நான் அப்பாவிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக சென்றிருந்தேன். ஆனால் அவருக்கு இன்னும் என் மீதான கோபம் குறையவில்லை. என்னை பார்ப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.

கேள்வி: வர்கலாவில் எஸ்.ஐ.யாக பணி நியமனம் செய்யப்பட்டு இரண்டே நாட்களில் கொச்சினுக்கு பணியிடமாற்றம் பெற என்னக் காரணம்..?

பதில்: எனது மகன் இப்போது கொச்சினில் படித்து வருகிறார். மகனுக்காக நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கொச்சினுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன். மற்றபடி இதில் வேறு எந்த காரணமும் இல்லை.

கேள்வி: உங்களது வலி நிறைந்த அனுபவங்களின் அடிப்படையில், இந்தச் சமூகத்திற்கு நீங்கள் கூற விரும்புவது..?

பதில்: கணவர் சரியாக அமையாத பெண்களை அவர்களது பெற்றோர் பாசத்தோடு அரவணைக்க வேண்டும். இந்தச் சமூகம் என்ன நினைக்குமோ, உறவினர்கள் என்ன நினைப்பார்களோ, என அஞ்சாமல் ஆதரவு கரம் நீட்ட வேண்டும். அதேபோல் பெண்களும் தன்னம்பிக்கையோடு போராடி உதாசீனப்படுத்தியவர்கள் முன்பு வாழ்ந்துகாட்ட வேண்டும். தற்கொலை என்பது எதற்குமே தீர்வல்ல. தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

English summary
Special interview with Varkala Sub inspector annie shiva
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X