அட.. திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்! இந்தியாவிற்கு அதிகரிக்கும் வருமானம்
திருவனந்தபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி கொள்கின்றன. இதனால் கேரளா மற்றும் மத்திய அரசுக்கான வரிவருவாய் அதிகரிக்க உள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா சார்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து வந்த கப்பல்... 90 நாட்களுக்கு பின் இயங்கும் இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

விமான சேவைகள் நிறுத்தம்
இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறையால் அந்த நாட்டில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதேபோல் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏர்லைன்ஸ் சார்பில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடே காரணமாகும்.

2 நகரங்களுக்கு விமானம் இயக்கம்
இருப்பினும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரங்களுக்கு இடையே மட்டும் விமானங்கள் இயங்கி வருகின்றன. இந்த 2 சேவைகள் லாபகரமானதாக இருப்பதால் இன்னும் கைவிடப்படவில்லை. இக்கட்டான நிலையிலும் இந்த 2 நகரங்களுக்கும் இலங்கை ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்கி வருகிறது.

திருவனந்தபுரத்தில் எரிபொருள்
இந்நிலையில் தான் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளதால் இந்த 2 விமானங்களுக்கும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் விமான நிலையமானது தொழில்அதிபர் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவருக்கும் லாபம் கிடைக்கும்.

மத்திய, மாநில அரசுக்கும் வரிவருவாய்
நீண்டதூரம் பயணிக்கும் விமானங்களில் ஒரு நேரத்தில் 100 டன்களுக்கும் அதிகமான ஏரிபொருளை நிரப்பப்படும். இதனால் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்புவதன் மூலம் அதற்கான வரி வருவாயானது மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும். சமீபத்தில் கொழும்பில் இருந்து ஆஸ்திரேலியா மெல்போர்ன், ஜெர்மனியில் பிராங்புர்ட் நோக்கி சென்ற 2 விமானங்கள் எரிபொருள் நிரப்பி உள்ளன. மீண்டும் ஜூன் 1, 2 ம் தேதிகளில் முறையே மெல்போர்ன், பிராங்புர்ட் செல்லும் 4 விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பப்பட உள்ளன.

திருவனந்தபுரம் தேர்வு ஏன்?
கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னையை ஒப்பிடும்போது திருவனந்தபுரம் விமான நிலையம் தான் அருகே உள்ளதால் இலங்கை ஏர்லைன்ஸ் சார்பில் அங்கு எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எரிபொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இலங்கை ஏர்லைன்ஸ்க்கு எரிபொருளுக்கான கட்டணம் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் மற்ற விமான நிறுவனங்கள் எரிபொருளுக்கு செலுத்தும் தொகையே இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு வரகிறது.