பலிகடா.. உண்மையான குற்றவாளிகளை விசாரிக்கவே இல்ல.. பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட ஸ்வப்னா சுரேஷ்
திருவனந்தபுரம் : கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஸ்வப்னா சுரேஷ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் அதிகாரம் பலம் கொண்டவர்கள், இதுவரை விசாரிக்கப்படவில்லை என தனது கடிதத்தில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தான் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும், பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விடாத ஸ்வப்னா! நடுவானில்.. பினராயி விஜயனை நோக்கி வந்த 2 பேர்.. விமானத்தில் நடந்த பரபர சம்பவம்!

ஸ்வப்னா சுரேஷ்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு அனுப்பப்பட்ட ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவை உலுக்கிய விவகாரம்
கேரளாவில் புயலைக் கிளப்பிய இந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, முதன்மைச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிவசங்கர், தகவல் தொடர்புத் துறைச் செயலாளர் பதவியில் இருந்தும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, அமலாக்கத் துறை மற்றும் சுங்கத்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

பினராயி விஜயனுக்கு தொடர்பு
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து பினராயி விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்வப்னா சுரேஷ் கடிதம்
இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். உங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுகிறேன் என பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்வப்னா சுரேஷ்.

முதல்வருக்கு தொடர்பு
மேலும், ஸ்வப்னா சுரேஷ் தனது கடிதத்தில், "கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரே, தங்க கடத்தலில் ஈடுபட்டார். மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நான் செயல்பட்டேன். இதைத் தவிர நான் வேறு எந்த தவறும் செய்யவில்லை. கேரள முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழக்கில் நேரடி தொடர்பு உள்ளது. அவர்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.