மால்களில் பார்க்கிங் கட்டணம் எதுக்கு.. அது உங்க கடமை... குட்டு வைத்த கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம் : மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரளாவைச் சேர்ந்த பிரபலமான லுலு மால் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மால்களில் வாகன கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரு சக்கரம் வாகனம் முதல் 4 சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி குன்ஹி கிருஷ்ணன், கட்டட விதிகளின்படி கட்டடம் கட்டுவதற்கு வாகனம் நிறுத்த போதிய இடம் அவசியம் எனவும், கட்டடத்தின் ஒரு பகுதிதான் வாகனம் நிறுத்தும் இடம் எனவும், பார்க்கிங் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிட்டார்.
அரசு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கட்டடம் கட்டப்படுகிறது எனக் கூறிய நீதிபதி, கட்டடம் கட்டிய பிறகு, கட்டடத்தின் உரிமையாளர் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், முதல் பார்வையில் அது சாத்தியமில்லை என்று தான் கருதுகிறேன் என்று தெரிவித்த நீதிபதி குன்ஹி கிருஷ்ணன் இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.