By: Oneindia Tamil Video Team
Published : December 27, 2017, 10:20

சுருட்டிப் போட்ட சுனாமி... 13 ஆண்டுகளாக மாறாத சோகம் கடற்கரையில் கண்ணீர் நினைவுகள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி சுருட்டிப்போட்டதன் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரை தொடங்கி குமரி கடற்கரை வரை உள்ள மீனவ கிராம மக்கள் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. இது வலுவடைந்து இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரங்களில் வசித்தவர்களும், கடற்கரைகளுக்கு சென்றவர்களும் உயிரிழந்தனர். பலத்த பொருள் சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடமைகளையும் இழந்தனர்.

சுனாமியில் கன்னியாகுமரி, நாகை, கடலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாகை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கடலூரில் சுமார் 600 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று கறுப்பு தினமாக அனுசரித்து மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மீன் சந்தைக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலைக்கு உறவுகளை காவு கொடுத்த மக்கள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தும், சுனாமி தாக்கிய கடற்கரைகளில் மலர் தூவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பால் ஊற்றியும் தங்களின் சோகத்தை நினைவு கூர்ந்தனர்.

கடற்கரை கிராமங்களில் நினைவு திருப்பலிகள், மவுன ஊர்வலங்கள், மலரஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திலும் 119 பேர் பலியான மணக்குடி கல்லறை தோட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா