நேரா தூத்துக்குடிக்கு ஃப்ளைட்.. டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு உடனே கிளம்பும் முதல்வர் ஸ்டாலின்!
டெல்லி: நாளை காலை நேரடியாக தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு செல்ல உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்தும், மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்கி, கூடுதல் நிவாரணம் கோர உள்ளார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து, தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார். மேலும், இன்று இரவு 10.30 மணியளவில் பிரதமரை சந்தித்து பாதிப்புகள் பற்றி விளக்கிவிட்டு, நாளை தூத்துக்குடிக்கு செல்ல உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காப்பாற்றப்பட்டனர். புயலுக்கு முன்பும், பின்பும் அரசு எடுத்த நடவடிக்கையால்தான் பாதிப்புகள் குறைந்தது. மத்திய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம். மத்திய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது. மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.
நான் பிரதமரை சந்திக்க திட்டமிட்ட நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக இறங்கி உள்ளது. வானிலை ஆய்வு மையம் சொன்னதை விட பல மடங்கு மழை தென் மாவட்டங்களில் பொழிந்துள்ளது. சென்னை பெருவெள்ளத்திற்காக வைக்கப்பட்ட கோரிக்கை உடன் சேர்த்து, தென் மாவட்ட வெள்ள சேதத்தையும் இணைத்து கோரிக்கை வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டு இருந்தேன். இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கி உள்ளார்கள்.
பிரதமர் மோடியை இன்று இரவு சந்தித்து நிலவரத்தை தெரிவித்துவிட்டு தூத்துக்குடிக்கு கிளம்புகிறேன். நாளை காலை நேரடியாக நான் தூத்துக்குடி, நெல்லைக்கு செல்கிறேன். மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன். மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications