கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.
கார்த்திகை மாதத்தில் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் காட்சியளிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து காடு மேடு கடந்து மலையேறி செல்வார்கள்.
ஐயப்பனை காணச் செல்லும் பக்தர்கள் 1 மண்டலம் (48 நாட்கள்) மாலையிட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி பாதயாத்திரையாக செல்வதுண்டு. இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது.
சிவனுக்கும், மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுளாக கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார்.
கழுத்தில் மணியோடு பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன். மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது, பந்தள ராணிக்கும் குழந்தை பிறந்தது. நாட்கள் செல்லச் செல்ல விதி அரசி ரூபத்தில் விளையாடியது.
தனது மகனை அரசனாக்க வேண்டும் என்பதற்காக மணிகண்டனை தவிர்த்து வந்தாள் அரசி. தலைவலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். தலை வலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் என அரசவை வைத்தியரை கூற வைத்தாள்.
தாயின் நோய் தீர புலிப்பால் கொண்டு வர வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன். தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பினார்.
வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார்.
முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார். இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன் புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றார்.
காட்டுக்கு செல்லும் வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனை தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலிகளாக புடை சூழ புலிமேல் ஏறி பந்தள நாட்டுக்குச் சென்றார் மணிகண்டன் என்ற ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனை கண்டு பதறிப் போய், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள் அரசி.
ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார். அவதார நாயகன் தர்ம சாஸ்தா அய்யன், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்க போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் ஐயப்பன்.
ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை குறிப்பாக நெய்யில் செய்த பலகாரங்களை எல்லாம் எடுத்துச் செல்வார். தேங்காய்க்குள் நெய் ஊற்றிக்கொண்டு சென்றால் பல நாள் கெடாமல் இருக்கும்.
மலையை அடைய பல நாட்களாகும் என்பதால் நெய் கெடாமல் எடுத்துச் செல்வதற்கு இந்த வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது.
சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை மரத்தால் செய்யப்பட்ட தாரு சிலை ஆக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய் அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. இப்போதும் கூட பழைய முறையை பின்பற்றக்கூடிய கேரள ஐயப்ப பக்தர்கள் நெய் தோணியில் கொட்டிவிட்டு, அதிலிருந்து சிறிது நெய் பிரசாதமாக கொண்டு வருவது வழக்கமாக உள்ளது.
தற்போது நேரடியாக ஐயப்ப சாமி சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.