விலை குறைவில் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையை இதுவரை நாம் வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவோம். ஆனால் இந்த வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்
அதுமட்டுமில்லாமல் நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட, நீரில் ஊற வைத்து உட்கொண்டால் தான், அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும் மற்றும் எளிதில் செரிமானமாகவும் உதவி புரியும்.
வேர்க்கடலையை நீரில் ஊற வைக்கும் போது, அதில் உள்ள பைடிக் அமிலம் போன்ற சிக்கலான சேர்மங்களை உடைத்தெறிய உதவி புரிந்து எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
எனவே, செரிமான பிரச்சனைகளை தடுத்து, செரிமானத்தை மேம்படுத்த வேர்க்கடலையை ஊற வைத்து உட்கொள்வது சிறந்தது.
வேர்க்கடலையை ஊறவைப்பதால் அதன் ஊட்டச்சத்து அளவு அதிகரிக்கிறது. அவற்றை உட்கொள்ளும்போது ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வேர்க்கடலையில் தாவர வகை புரோட்டீன் அதிகமாக உள்ளன. இந்த புரோட்டீனை முழுமையாக பெற ஊற வைக்க வேண்டும்.
ஊறவைத்த வேர்க்கடலையில் இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.
எனவே, தினமும் சிறிது ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இதய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய திருப்தியை உணர வைக்கிறது. இதன் விளைவாக மற்ற உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது.
வேர்க்கடலையை ஊறவைக்கும்போது, அதில் உள்ள நார்ச்சத்து உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.