Sidhanathan K       May 02, 2024

சரும வியாதியை போக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் பயன்கள்..!!

மணற்பாங்கான பகுதிகளில் செழித்து வளரும் சிவனார் வேம்புச் செடியின் பூக்கள், காய்கள், தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பல மருத்துவப் பயன்களைக் கொண்டது.

சிவனார் வேம்பு செடி பூக்கள், இலைகள் மற்றும் வேர்த்தண்டுகளை நிழலில் உலர்த்தி, பின் நன்கு இடித்து தூளாக்கி பொடி செய்து, இந்த பொடியை, தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டு வந்தால், ஆயுள் நீட்டிக்கப்படுகிறது.

சிவனார் வேம்பு செடியை தீயில் இட்டு, வரும் சாம்பலை, தேங்காய் எண்ணெயில் கலந்து, தலை மற்றும் உடலில் உள்ள சொறி சிரங்கு போன்றவற்றில் தடவி வர, விரைவில் மாற்றம் தெரியும்.

கைப்பிடி அளவு சிவனார் வேம்பு இலைகளை நன்கு அலசி, நீர் போக உலர்த்தி, அந்த இலைகளை நன்கு மையாக அரைத்து, உடலில் ஏற்படும் கட்டிகளின் மீது தடவி வர, கட்டிகள் யாவும் உடைந்து மறைந்து விடும்.

சிவனார் வேம்பு இலைகளை சிறிது எடுத்து அதனுடன் சில ஆடாதோடை இலைகளை சேர்த்து நன்கு அலசி மையாக அரைத்து அந்த விழுதை, சிறு எலுமிச்சை அளவு தினமும் சாப்பிட்டு வர உடலில் சேரும் நச்சுக்கள் நீங்கும்.

சிவனார் வேம்பு வேரை நன்கு அலசி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் இரண்டு வேளை குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் உடனே வெளியேறும்.

சிவனார் வேம்பின் வேரைக் கொண்டு பல் துலக்கினால் அல்லது வேரை நன்கு மென்று துப்பினால், பல்வலி, ஈறு வீக்கம், வாய் புண்கள் குணமாகும்.

சிவனார் வேம்பு வேரை நன்கு அலசி, அத்துடன் சிறிது ஜீரகம், இந்துப்பு சேர்த்து, கால் லிட்டர் நீரில் நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை பருகி வர, ஈறுகளின் வீக்கம், வாய்ப்புண்கள் குணமாகும்.

சிவனார் வேம்பு வேர்த் துண்டுகளை, சிறிது பரங்கிப்பட்டை பொடி சேர்த்து, நீரில் நன்கு காய்ச்சி, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, பாலில் கலந்து பருகிவர, சரும வியாதிகள் மற்றும் சருமத்தில் ஏற்பட்ட வீக்கம் குணமாகும்.

சிவனார் வேம்பு வேரை சிறிதளவு எடுத்து, அதை சிறிதளவு தேங்காய் எண்ணையில் இட்டு காய்ச்சி, எண்ணெய் கொதித்து தைல பதத்தில் வந்ததும், ஆறவைத்து எடுத்துக்கொண்டு, தழும்புகள் உள்ள இடங்களில் தினமும் தடவி வர, நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories