மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவை சாப்பிட்டால் உடல் வலுவடைந்து, சந்ததி பெருகும் என்கின்றனர். எனவேதான் இளம் வயது ஆண்களை இந்த அரிசி உணவை அதிக அளவில் சாப்பிட சொல்கின்றனர்.
சிவப்பு நிறமுள்ள மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இந்த அரிசியை தினசரி உணவாக உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தால் கூட அதிகம் பாதிக்காமல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். இது உடலில் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு, நரம்புகளையும் வலிமையாக்குகிறது.
உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும். அதோடு, இதய கோளாறுகள் வராமலும் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகமுள்ள இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வயிறு, வயிற்றுப்புண் தொடர்பான நோய்கள் குணமடையும். அதேபோல், புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சாதாரண அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு எலும்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மாப்பிளை சம்பா அரிசியில் சமைத்த உணவை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெற்று ஒரு மாதத்தில் பலன் தெரிய ஆரம்பிக்கும்.
ஆண்களுக்கு பலம் தருவது மட்டுமின்றி ஆண்மையையும் பலப்படுத்துகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தையும் தடுக்கிறது.
இந்த மாப்பிள்ளை சம்பா சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இளஞ்சூட்டில் குடித்துவர வயிற்றுப்புண், வயிற்றுவலி, வாய்ப்புண் குணமாகும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதம் ருசியாகவும் சத்தாகவும் இருக்கும். இதை சாதமாக மட்டும் அல்லாமல் மாவாக அரைத்து இட்லி, தோசை, புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.