மின் மோசடியை தடுக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் இலவச மின்சாரம் மற்றும் மின்சார மானியம் பெறுபவர்களான குடிசை வாசிகள், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர், 200 யூனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் ஆகியோர் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளதாகவும், இதனால் மின் முறைகேடு நடப்பதாகவும் எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆதார் எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொடுத்தாலும் பிரச்னை இல்லை. இது வெறும் மின் நுகர்வு கணக்கீடுகாகத்தான் என்பதை மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
மின் கட்டணம் செலுத்தும் போதும் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு இணைப்பதற்கு கால அவகாசம் இல்லை.
மேலும் மானியம் பெறாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆதார் அட்டையை இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியமும் தற்போது வரை நட்டத்தில் இயங்கி வருவதால், இதை சரி செய்யவே இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tangedco.gov.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்றால், வலது புறத்தில் 'Link Your Service connection number with Aadhar' என்கிற ஆப்ஷன் இருக்கும்.
அதை க்ளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் Service Connection Number கேட்கப்படும். அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.
தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணிற்கு, OTP அனுப்பப்படும். அதனை உள்ளிடவும்.
மொபைல் எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தில் Billing Service என்ற பகுதிக்குச் சென்று மொபைல் நம்பரை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
OTP உள்ளிட்ட பிறகு திறக்கும் பக்கத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை சரியாக நிரப்பிய பின்னர் 'Declaration' கேட்கப்படும்.
அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் The details has been uploaded successfully என்று காட்டும். இப்போது மின் இணைப்பு எண்ணுடன் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது.