Sidhanathan K       Oct 17, 2024

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எவ்வாறு பயன்படுத்துவது..?

புரதங்கள், பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை முடி உதிர்வதை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் போட்டு கருநிறம் வரும் வரை சூடாக்கவும். பின் அதை குளிர்வித்து உச்சந்தலையில் தடவி 10-15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.

குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உலர விட்டு, பின் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இதனை உச்சந்தலையிலும், முடியிலும் தடவி 30-45 நிமிடங்கள் விட்டு அலசினால் நல்ல பலன் கிடைக்கும். சேதமடைந்த முடியை சரிசெய்ய வாரத்திற்கு ஒரு முறை இதை செய்யலாம்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை தண்ணீரில் சுமார் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் குளிரச்செய்து அந்த நீரை கூந்தலில் ஊற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். 10-15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு அலசினால் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடியை பெறலாம்.

கறிவேப்பிலை மற்றும் கற்றாழையை சம அளவு எடுத்து ஜெல்லாக அரைத்து, உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி 20-30 நிமிடம் விட்டு, முடியை அலச முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, பொடுகு பிரச்சனையும் சரியாகிவிடும்.

ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை எண்ணெயை ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து சிறிது சூடாக்கி முடிக்கு தடவவும். சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில்  ஷாம்பு கொண்டு கழுவலாம். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து பேஸ்டாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை கறிவேப்பிலையுடன் கலந்து முடியின் வேர்களில் படும்வரை தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு கழுவினால் முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கறிவேப்பிலையை செம்பருத்தி இதழ்களுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைக்கவும். இதனை உச்சந்தலை மற்றும் முடிக்கு தடவி சுமார் 40 நிமிடங்கள் கழித்து முடியை அலசவும். வாரம் ஒரு முறை இதனை செய்வதன் மூலம் முடி வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்தலாம்.