சில கோயில்களில் பிரசாதத்துடன் தரப்படும் கயிறுகளை கையில் கட்டிக் கொள்வதுண்டு. சிலர் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக கையில் கயிறை கட்டிக்கொள்வார்கள்.
மேலும் சிலர், தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காக கயிறு கட்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் கெட்ட கனவுகள் எதுவும் வராமல் இருக்கவும் கயிறு கட்டிக் கொள்வார்கள்.
அம்மன் கோயில்களிலும், காசி, திருப்பதி போன்ற கோயில்களிலும் கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிற கயிறுகள் தரப்படுகின்றன.
ஒருவரது ஜாதகத்தில் சூரிய திசை அல்லது சூரிய புத்தி நடக்கும்போது, சிவப்பு நிற கயிறை கட்டுவார்கள். இதனால், திறமையாக, சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
ஜாதகத்தில் சந்திர திசை மற்றும் சுக்கிர திசை நடப்பவர்களுக்கு அல்லது சந்திர, சுக்கிர புத்தி நடப்பவர்களுக்கு வெள்ளை நிறக் கயிறு கட்டப்படும்.
புதன் திசை அல்லது புதன் புத்தி நடக்கும்போது, பச்சை நிறக் கயிறு கட்டுவார்கள். இந்த பச்சை நிறக்கயிறு, குபேரனின் ஆசியுடன், செல்வத்தில் திளைக்கலாம்.
அதேபோல, குருவின் ஆசி பெற மஞ்சள் கயிறை அணியலாம். குழந்தைகளுக்கும் இப்படி மஞ்சள் நிறக் கயிறை கட்டும்போது, நன்றாக படிக்கக்கூடியவர்களாக விளங்குவார்கள்.
சனி திசை அல்லது சனி புத்தி நடப்பவர்கள் கருப்பு நிறக் கயிறு கட்டுவார்கள். இதனால், சனியின் வீரியம் குறையும் என்பார்கள். திருஷ்டிக்காகவும் சிலர் கருப்பு நிறக் கயிறு கட்டுவார்கள்.
கயிறை, ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி பூஜையின் போது தரப்படும் கயிறுகளை மட்டும் பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளலாம்.
கோயிலில் வாங்கிய கயிறாக இருந்தாலும்சரி, மந்திரிக்கப்பட்ட கயிறாக இருந்தாலும்சரி, 21 நாட்களுக்கு மட்டுமே இதில் சக்தி இருக்குமாம். அதற்கு மேல் அவைகளை கழற்றி, ஏதாவது நீர் நிலைகள் அல்லது மக்கள் நடமாட்டமில்லாத இடங்களில் வீசி விட வேண்டும்.
பாதுகாப்பு அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கயிறு கட்டியிருந்தால், அந்த கயிறை 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமாம். ஒருவேளை 21 நாட்களுக்கு முன்பே கயிறு தானாக அவிழ்ந்துவிட்டால், அதை மறுபடியும் கட்டக்கூடாது.