தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.
இந்த தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அந்த மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி தேர்வு இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு, மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மூலம் மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், செப்டம்பர் 8ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், தனித்தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.