Tap to Read ➤

நீங்கா நினைவில் நம்முடன் வாழும் கலாமின் வாழ்க்கை பயணம் ...!!

சரித்திர நாயகன் அப்துல்கலாமின் வாழ்க்கை பயணம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!
Sidhanathan K
காந்தியையோ, காமராசரையோ பார்த்திராத நமக்கு எளிமையையே உருவாக நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.அப்துல் கலாம்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர் என்றெல்லாம் போற்றக்கூடிய மாமனிதர் அப்துல்கலாம்.
ஒரு விஞ்ஞானியாக திருமணம் கூட செய்யாமல் தன் வாழ்நாளையே இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான ஆராய்ச்சியில் அர்ப்பணித்தவர். பின்னர் நாட்டின் முதல் குடிமகனாக கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் கனவுகளை விதைத்தவர்.
அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் எளிமையான ஒரு மீனவ குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 தேதி பிறந்தார். பள்ளி நாட்களில் தந்தைக்கு உதவுவதற்காக சைக்கிளில் வீடு வீடாக செய்தித்தாள்களை விற்று வந்தார்.
ராமேஸ்வரத்தில் வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்ப சூழ்நிலை தான் கடைசி வரை கலாம் கடைபிடித்த எளிமையை அவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.
திரு.அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் அவரின் அரிய புகைப்படங்கள், அவர் வாங்கிய விருதுகள், அவரின் கண்டுபிடிப்புகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மசூதி வீதி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த வீடு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். நுழைவுக்கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.
திரு.அப்துல் கலாம் 1952-1954 வரை மலைக்கோட்டை புனித ஜோசப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தார். மறைந்த எழுத்தாளர் சுஜாதா அப்துல் கலாம் அவருடன் ஒரே வகுப்பில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாம் பற்றி எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடுகையில், "கல்லூரி நாட்களில் அப்துல் கலாம் வகுப்பில் பிரபலமான மாணவராக இல்லை என்றும்,மிகவும் அமைதியான கூச்ச சுபாவம் உடையவராகவே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
இந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களிப்பு அளப்பரியது. இன்று செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா உலகின் முன்னோடியாக திகழ, அப்துல் கலாமும் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம் இந்திய ராணுவத்திற்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்தார்.
இஸ்ரோவில் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்ந்த அவர், 1980 ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகிணி-I என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.
திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, திரு.அப்துல் கலாம் அவர்கள் 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தார்.
அந்த காலகட்டத்தில் நாடு முழுவதிலும் பயணம் செய்து கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரின் உயர்ந்த ஆசையை மாணவர்களின் மனதில் விதைத்தவர்.
குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன், மத்திய அரசால் இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றவர்.
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
குடியரசு தலைவராக இருந்த போதிலும் அப்துல் கலாம் அவர்கள் எளிமையான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார்.
இந்திய திருநாட்டுக்கு பல குடியரசு தலைவர்கள் வந்திருந்தாலும் அந்த பதவிக்கு மிகப்பெரிய மரியாதையை தேடித்தந்தவர் திரு.அப்துல் கலாம் அவர்கள் தான்.
அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் நெஞ்சங்களில் அவர் ஏற்றிய ஒளி என்றென்றைக்கும் இருந்துகொண்டே தான் இருக்கும்.
அப்துல் கலாம் பெற்ற விருதுகளை தெரிந்துகொள்ள கீழே கிளிக் செய்யவும்