Sidhanathan K       Sep 29, 2024

கல்லீரலின் காவலனான கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்..!!

ஈரமான இடங்களில் வளரும் கீழாநெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.

கீழாநெல்லி மஞ்சள் காமாலையை விரட்ட பேருதவி புரிகிறது. கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து மை போல அரைத்து, மோருடன் கலந்து குடித்து வந்தால் காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் குணமாகும். 

கீழாநெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை சீரகத்தூள் மற்றும் தேன் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். அதேபோல, இது உடலுக்கு குளிர்ச்சி என்பதால் வாய்ப்புண்ணையும் ஆற்றும்.

கீழாநெல்லி இலையை நசுக்கி, 2 டம்ளர் தண்ணீரில் போட்டு பாதி அளவு வரும்வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் வெள்ளைபடுதல் நீங்கும்.

கீழாநெல்லியில் 3 பங்கு நீர் சேர்த்து, 1 பங்கு நீராக வரும்வரை சுண்ட காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீர் வழியாக வெளியேறுமாம்.

தினமும் 3 வேளை சாப்பிட்ட பின்பு, கீழாநெல்லி பொடியை அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், சர்க்கரை கட்டுக்குள் வரும் என்பார்கள். ஆனால், மருத்துவரின் உதவியோடு சாப்பிடுவது நல்லது.

இந்த கீழாநெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்து கட்டினால் காயங்கள் குணமாகும். அதேபோல, எலிக்கடி மற்றும் தேள்கடி விஷம் குணமாகவும் இந்த கீழாநெல்லி உதவுகிறது.

இந்த கீழாநெல்லி குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால், கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடி உதிர்வு குறையும்.

கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் நீங்கும்.

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

கீழாநெல்லி செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். அதேபோல, ஈறுகளில் சாறு நன்றாக படிய வைத்திருந்தால், ஈறு நோய்களும் குணமாகும்.