Sidhanathan K       Nov 18, 2024

மாதவிடாய் கோளாறு முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் சதகுப்பையின் நன்மைகள்..!!

சதகுப்பை நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். இதனுடைய இலைகள் இனிப்பும், கார்ப்பும் கலந்த சுவையாகும். 

கொத்தமல்லி விதை போல இருக்கும் இதன் விதைகளை, நாள் முழுவதும் கடுமையான வேலை செய்பவர்கள் சோர்வு தெரியாமல் இருக்க உணவில் சேர்த்து சாப்பிட தொடங்குவார்கள்.

சதகுப்பை இலையை அரைத்து விழுதாக்கி சிறு நெல்லி அளவு எடுத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, 3 வேளை என 2 நாட்கள் குடித்துவந்தால் பசியின்மை மற்றும் மந்த நிலை நீங்கும்.

சதகுப்பையில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சதகுப்பையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் பசியை அடக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது உடலிலுள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.

சதகுப்பை கீரை சாறு 20 மி.லி அளவு எடுத்து, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து கொடுத்தால் குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலி குறையும். மேலும், ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து, இந்தக் கலவையை காலை, மாலை 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு, சோம்பு நீர் குடித்துவர மாதவிடாய்க் கோளாறுகள் குணமாகும்.

சாதகுப்பை 1 டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த நீரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால் சதகுப்பை மற்றும் அமுக்கரா சூரணம் இரண்டையும் கலந்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.