Varalakshmi N       Jun 22, 2026

டயட்டில் இருப்பவர்களுக்கும் ஏற்ற சாம்பா ரவை பொங்கல்!

AI-IMAGE

அரிசி பொங்கலுக்கு மாற்றாக ஆரோக்கியம் நிறைந்த உணவை       விரும்புபவர்களுக்கு சாம்பா கோதுமை ரவை பொங்கல் சிறந்த தேர்வாகும்.

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த இந்த பொங்கல், காலை உணவாக சாப்பிட உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

தேவையான பொருட்கள்: சாம்பா கோதுமை ரவை – 1 டம்ளர், பாசிப்பருப்பு – ¼ டம்ளர், மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, இஞ்சி – தேவையான அளவு (பொடியாக நறுக்கியது),

முந்திரி – 5 முதல் 10, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான       அளவு, டால்டா அல்லது நெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 2½ டம்ளர்

செய்முறை: முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வேகவைத்து       வைத்துக்கொள்ளவும்.அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் சிறிதளவு டால்டா அல்லது நெய் சேர்த்து சூடாக்கவும்.

அதில் மிளகு, சீரகம் மற்றும் நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் 2½ டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் கோதுமை ரவையை மெதுவாகத் தூவி, கட்டி ஏற்படாதவாறு தொடர்ந்து கிளறவும்.

சுமார் 2 நிமிடங்கள் கழித்து ரவை முக்கால் பாகம் வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பொங்கல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

சூடான சாம்பா கோதுமை ரவை பொங்கலை தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது கோஸ்டுடன் பரிமாறினால் அதன் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தையும் சுவையையும் ஒருசேர தரும் இந்த பொங்கலை வீட்டிலேயே செய்து மகிழுங்கள்!