Tap to Read ➤

தீபாவளி நன்னாளில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சில முன்னெச்சரிக்கைகள்.!

பாதுகாப்பிற்கென முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்..!!
Sidhanathan K
தீபாவளி பண்டிகையில் எண்ணெய்க் குளியல் எடுத்து, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசு வெடித்தால் தான் பண்டிகையே முழுமையடைந்த திருப்தி எல்லோருக்கும் இருக்கும்.
பட்டாசு வெடிப்பது மட்டும் முக்கியம் அல்லாது, பாதுகாப்பாகவும் வெடிக்க வேண்டும். பட்டாசுகளினால் ஏற்படும் காயங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
முதலில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசு பெட்டியில் அச்சிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்து பயன்படுத்த வேண்டும். அதேபோல் பட்டாசுகளை முறையாக உரிமம் பெற்ற கடைகளில் வாங்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் பாதுகாப்பிற்காக ஒரு வாளி நீா் அல்லது மணல் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீ பற்றாத ஆடைகள் மற்றும் பாதுகாப்புக்கென காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும்.
தவறுதலாக ஆடையில் தீப்பற்றினால் ஓடாமல் கீழே படுத்து உருள வேண்டும். பின், உடனே தண்ணீா் ஊற்றி அணைக்க வேண்டும். எதிா்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டால் காயத்தின் மீது தொடர்ந்து குளிர்ந்த நீரை ஊற்றுவதன் மூலம் தீக்காயத்தின் தீவிரத்தை குறைக்கலாம்.
எரிந்து முடிந்த கம்பி மத்தாப்பு, பட்டாசுகளை தண்ணீா் உள்ள வாளியிலோ அல்லது உலா்ந்த மண்ணிலோ அழுத்திவிட வேண்டும். வெடிக்காத பட்டாசுகள் மீது ஈரமான சாக்குகளை போட்டு அதனை செயலிழக்க செய்வது மிகவும் அவசியம்.
சிறுவர்கள் தனியாக மொட்டை மாடிகளில் அல்லது குடிசை பகுதிகளில் இல்லாமல் திறந்த வெளியில் பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மெழுகுவர்த்திகள் மற்றும் தீப்பெட்டிகளை வைத்து பட்டாசுகளை கொளுத்துவதை விட, நீளமான ஊதுபத்தியை பயன்படுத்தி பட்டாசுகளை வெடிப்பது நல்லது.
ராக்கெட் போன்ற வானவெடிகளை பாட்டில்கள் மற்றும் பெட்டிகள் மீது வைக்க வேண்டாம். அவை தீடீரென சாய்ந்து தேவையற்ற தீவிபத்துகளை ஏற்படுத்தலாம்.
புஸ்வானம் மற்றும் சங்குச்சக்கரம் ஆகியவற்றைக் கொழுத்தும்போது அருகில் நிற்க வேண்டாம். இந்த வெடிபொருட்கள் ஒரு கட்டத்தில் வெடிக்க வாய்ப்பு உள்ளது.
மிக முக்கியமாக, எரிவாயு கிடங்கு, பட்டாசு கடை, வைக்கோல் மூட்டை, பெட்ரோல் பங்க், டிரான்ஸ்பார்மர், மருத்துவமனை மற்றும் சந்தை போன்ற முக்கிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
தற்போது மழைக்காலம் என்பதால் பட்டாசுகள் நமத்து போவதுண்டு. அதற்காக ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்பில் வைத்து உலர்த்தக் கூடாது.
வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சேர்த்து வெடிக்கக் கூடாது.
தீப ஓளித்திருநாளில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒன்இந்தியா சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..!!