Sidhanathan K       Nov 23, 2024

புதிதாக கார் வாங்க போறீங்களா..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!

நீண்ட கால சேமிப்பின் மூலமாகவோ அல்லது கடன் மூலமாகவோ ஏதாவது ஒரு வகையில் கார் வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் கனவு காண்கிறோம்.

கார் வாங்கும்போது, அடிக்கடி ஓட்டப் போகிறோமா அல்லது அவ்வப்போது செல்வதற்காக மட்டுமா என்ற தேவைகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கொண்ட கார்களை வாங்கலாம்.

கார்களை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 கி.மீ வரை, அதாவது ஒரு மாதத்திற்கு 1,500 கி.மீ அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே ஓட்டுபவராக இருந்தால், பெட்ரோல் அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பயன்பாடு கொண்ட வாகனத்தை வாங்கலாம்.

அதுவே, ஒரு மாதத்தில் 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓட்டக்கூடியவர்கள் என்றால், டீசல் வாகனம் அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாகனத்தை வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும்.

அடுத்ததாக, கார் வாங்கவேண்டும் என்றால் நம்மை போல் நடுத்தர குடும்பத்தினர் முதலில் கவனிப்பது வாகனத்தின் மைலேஜ் எவ்வளவு என்பதைத்தான்.

அப்படியாக நாம் வாங்கும் வாகனம் நமது நிதிநிலைக்கு ஏற்ப மைலேஜ் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

பெட்ரோல் பயன்பாடு கொண்ட கார்களில் சாதாரணமாக, நகரத்திற்குள் 15 கி.மீ வரையிலும், நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ வரையிலும் மைலேஜ் கொடுத்தால் நல்ல தேர்வாகும்.

அதுவே, டீசல் வாகனமாக இருந்தால் நகரங்களில் சாதாரணமாகவே 18 கி.மீ வரையிலும் நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ வரையிலும்கூட மைலேஜ் கொடுக்கும்.

அடுத்ததாக கார் வாங்கும்போது, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா, ஏர்பேக், சீட்பெல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

காரின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள NCAP Safety Crash எனும் ரேட்டிங்கை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில் 4 நட்சத்திரங்களுக்கு மேலான ரேட்டிங்கை பெற்ற கார்கள் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சத்தை கொண்டிருக்கும்.

பெரிய குடும்பமாக இருந்தாலும்கூட அனைவருமே அடிக்கடி ஒன்றாக பயணிப்பதாக இருந்தால் எஸ்யுவி போன்ற பெரிய கார்களை தேர்வு செய்யலாம். இல்லையென்றால், காம்பாக்ட் எஸ்யுவி கார்களை தேர்வு செய்துகொள்ளலாம்.