நாம் உண்ணும் உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, நமது உடலின் திரவ நிலையை சமநிலையில் பராமரிக்கவும், நரம்புகளின் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உப்பு உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிகப்படியான உப்பு நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக தாகத்தை அனுபவித்தால், உணவில் அதிக உப்பை சேர்ப்பதாக அர்த்தம்.
உணவில் உப்பை அதிகமாக சேர்க்கும் போது, கால்கள் மற்றும் கைகளில் அடிக்கடி வீக்கத்தை சந்திக்க நேரிடும். அப்படி அடிக்கடி கால் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உப்பில் உள்ள சோடியம் உடலில் நீரை தக்கவைத்து, இரத்தத்தை அடர்த்தியாக்குவதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, இறுதியில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
சோடியம் அளவை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும் போது, அது சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தி சிறுநீரக கற்கள் மற்றும் திரவ சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான உப்பு செரிமான மண்டலத்தை பாதித்து, வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்று அசௌகரியம் ஏற்படலாம். அதுவும் உணவு உண்ட பின் சந்திக்கும் செரிமான பிரச்சனைகள் அதிக உப்பு உட்கொள்வதை உணர்த்தும்.
நமது உடல் சிறப்பாக செயல்பட சிறிய அளவிலான சோடியம் அல்லது உப்பு போதுமானது. ஒருவருக்கு தேவையான உப்பின் அளவானது வயது, பாலினம், ஆரோக்கியம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.