தென்னிந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான கேரளா, தனிநபர் வருமானம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
கேரளா முதலில் 'வேணாடு' என்று அழைக்கப்பட்டது. வேணாடு கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா உயிரிழந்த நிலையில், நம்பூதிரி-நாயர் கூட்டணி வேணாட்டை கைப்பற்றி திருவிதாங்கூர் என்று பெயர் மாற்றியது.
அதன் பின்னர் மலையாள மொழி பேசும் மற்றொரு பகுதியான கொச்சியும் திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டது.
இதனையடுத்து மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டதால் மலபார் என்றும் அழைக்கப்பட்டது.
இப்படி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த கேரளா, கடைசியாக கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, இம்மாநிலத்திற்கு கேரளா என்கிற பெயர் உருவானது.
இது மலையாளத்தில் கேரளம் என்றும், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கேரளா என்றும் அழைக்கப்பட்டது.
அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கூட கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் அனைத்து மொழிகளிலும் "கேரளம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழியிலும் கேரளா இனி கேரளம் என்றுதான் அழைக்கப்படும்.