முந்தைய நாளின் சோர்வை போக்கி அன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்க நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.
ஆனால், மாறி வரும் வாழ்க்கை மற்றும் உணவு பழக்கத்தால் நல்ல தூக்கத்தை இழந்து தவித்து வருகிறோம். இரவில் போதுமான அளவு தூங்காமல் இருப்பது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
தூக்கம் என்பது வளர்சிதை மாற்றத்தின் (Metabolism) செயல்பாடுகளில் ஒன்றாகும். அந்த வளர்சிதை மாற்றத்தில் அனபோலிசம் (anabolism) மற்றும் கேடபாலிசம் (catabolism) என இரண்டு வகைகள் உண்டு.
இந்த செயல்பாடுகளை சமநிலைப்படுத்துவது தூக்கத்தின் போது மட்டுமே நிகழ்கிறது. எனவே தான் இரவு தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும்.
சராசரியாக ஒரு நபர் தினசரி 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு 14 மணி நேர தூக்கம் அவசியம்.
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்தில் தூங்க பழக்குவது தான் சிறந்தது. இதில் 1 மணிநேரம் முன் பின் இருக்கலாம். இவ்வாறு, தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படியே தூங்கினாலும் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தூங்கலாம். அதற்கு மேல் தூங்குவது இரவு தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்.
எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட ஆழ்ந்து தூங்குவது தான் முக்கியம். அதாவது, தூக்கத்தில் சுவாச அடைப்பு, குறட்டை போன்றவை ஏற்படாமல் ஆழ்ந்து தூங்குவதுதான் சிறப்பானது.