தமிழகத்தில் பருவமழை தொடங்கும் முன்பே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
பொதுவாக, மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுவதால், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவுகிறது.
104 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல்வலி, வயிற்று வலி, கண்களுக்கு பின்னால் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
பொதுவாக உடலில் 4.50 லட்சம் பிளேட்லெட்டுகள் இருக்கும். டெங்கு வந்த ஓரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை குறைந்து, சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாக உயரும். இந்த எண்ணிக்கை 1 லட்சத்திற்கு கீழே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்குவின் போது நம் தசைகளில் ஏற்படும் அழற்சிகள் காரணமாக சருமங்களில் அரிப்பு ஏற்படும்.
3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
டெங்கு கொசுக்கள் பெரும்பாலும் பகலில்தான் கடிக்கும். இந்த டெங்கு காய்ச்சல் ஏடீஸ் எனும் கொசுக்களால் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்க தடுப்பு மருந்து இல்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கலாம்.
நாம் வசிக்கும் பகுதி, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், மொட்டை மாடி போன்றவற்றில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். அதனால் அதிக நீராகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.